Last Updated : 15 Mar, 2018 08:23 AM

 

Published : 15 Mar 2018 08:23 AM
Last Updated : 15 Mar 2018 08:23 AM

விபத்தில் உயிரிழப்புகளை தடுக்க‌ கர்நாடக அரசு பேருந்துகளில் சீட் பெல்ட் அணிவது கட்டாயம்

சாலை விபத்துகளில் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் கர்நாடகாவில் அரசு பேருந்துகளில் பயணிகள் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநில போக்குவரத்துக் கழகத்துக்கு (கேஎஸ்ஆர்டிசி) சொந்தமான சொகுசு, ஏசி, மிதவை உள்ளிட்ட பேருந்துகள் அடிக்கடி விபத்துகளில் சிக்குகின்றன. இதனால் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கர்நாடக அரசு பேருந்து விபத்துகளில் மட்டும் ஆண்டுக்கு சராசரியாக 250 முதல் 270 பேர் உயிரிழப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் சாலை விபத்துகளில் உயிரிழப்போரின் எண்ணிக்கையை குறைப்பது குறித்து கர்நாடக போக்குவரத்துத் துறை உயரதிகாரிகள் பல கட்டங்களாக ஆலோசனை நடத்தி வந்தனர்.

பெங்களூருவில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு, வாகனத்தை பராமரிப்பது குறித்தும், விபத்துகளை தடுப்பது குறித்தும் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இது குறித்து கர்நாடக அரசு போக்குவரத்து கழகத்தின் நிர்வாக இயக்குநர் உமா சங்கர் கூறியதாவது:

பெங்களூருவில் இருந்து மும்பை, கோவா, திருவனந்தபுரம், ஹைதராபாத் போன்ற தொலைதூர நகரங்களுக்கு செல்லும் கேஎஸ்ஆர்டிசி விரைவு பேருந்துகள் அவ்வப்போது விபத்துகளில் சிக்குகின்றன. குறிப்பாக நெடுஞ்சாலைகளில் திடீரென ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க ஓட்டுநர் திடீரென பிரேக் பிடிக்கும் போது, இருக்கையில் இருந்து கீழே விழுந்து இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

விபத்துகளில் சிக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கையை குறைக்க, பேருந்துகளில் சீட் பெல்ட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக மும்பை, கோவா, திருவனந்தபுரம் செல்லும் பேருந்துகளில் இந்த திட்டம் விரைவில் அமல்ப்படுத்தப்படும். பின்னர் கேஎஸ்ஆர்டிசி பேருந்துகள் இயங்கும் 765 வழிகளிலும், இந்த திட்டம் படிப்படியாக‌ அமல்படுத்தப்படும்

இவ்வாறு உமா சங்கர் கூறினார். கர்நாடக அரசின் இந்த முயற்சிக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் மூலம் பாதுகாப்பாக உணர்வதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x