Published : 01 Mar 2018 11:41 AM
Last Updated : 01 Mar 2018 11:41 AM

வங்கி மோசடி புகார்: மெகுல் சோக்சியின் விழுப்புரம் நிலத்தையும் முடக்கியது அமலாக்கத்துறை

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி புகாருக்கு ஆளாகியுள்ள நிரவ் மோடியின் உறவினரும், கீதாஞ்சலி ஜெம்ஸ் உரிமையாளருமான மெகுல் சோக்சியின் சொத்துக்களை அமலாக்கத்துறை இன்று முடக்கியது. இதில் விழுப்புரத்தில் உள்ள நிலமும் பறிமுதல் செய்யப்பட்டது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நிரவ் மோடி ரூ.11,400 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக சிபிஐயிடம் அந்த புகார் தெரிவித்துள்ளது. இதேபோல, மெகுல் சோக்சி மீதும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுவரை ரூ. 5 ஆயிரத்துக்கும் அதிகமான நிரவ் மோடியின் சொத்துக்களை சிபிஐ முடக்கி உள்ளது. நிரவ் மோடியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு ரொக்கப்பணம், டெபாசிட்கள், சொகுசு கார், இறக்குமதி செய்யப்பட்ட கைக்கடிகாரங்கள், வீடுகள், நிலம் என பலதரப்பட்ட சொத்துக்கள் முடக்கப்பட்டன. மேலும், அவரது நிறுவனத்தின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி புகாருக்கு ஆளாகியுள்ள நிரவ் மோடியின் உறவினரும், கீதாஞ்சலி ஜெம்ஸ் உரிமையாளருமான மெகுல் சோக்சியின் சொத்துக்களை அமலாக்கத்துறை இன்று முடக்கியது.

மெகுல் சோக்சி மற்றும் அவரது நிறுவனத்திற்கு சொந்தமான, ஆயிரத்து 217 கோடி ரூபாய் மதிப்புள்ள 41 சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. இவற்றில் மும்பை மற்றும் கொல்கத்தாவில் உள்ள 15 அடுக்குமாடி குடியிருப்புகள், 17 அலுவலக இடங்கள் முடக்கப்பட்டன. மேலும், கொல்கத்தா, நாசிக், பன்வல் ஆகிய இடங்களில் உள்ள 231 ஏக்கர் நிலமும் பறிமுதல் செய்யப்ப்டது. அலிபர்க்கில் உள்ள பண்ணை வீடும் முடக்கப்பட்டது.

ஹைதராபாத் அருகே உள்ள 170 ஏக்கர் பொழுதுபோக்கு பூங்காவும் முடக்கப்பட்டது. இதன் மதிப்பு மட்டும் 500 கோடி ரூபாய் சொத்துக்களும் முடக்கப்பட்டன. இதுமட்டுமின்றி தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நிலத்தையும் அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x