Published : 25 Mar 2018 10:53 AM
Last Updated : 25 Mar 2018 10:53 AM

சமூகத்தின் பெரிய துயரம் ஆள் கடத்தல்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கவலை

உலகம் முழுவதும் அதிகரித்து வரும் ஆள் கடத்தல் சம்பவங்கள், மனித சமூகத்துக்கு மிகப்பெரிய துயரமாகவும், அச்சுறுத்தலாகவும் உருவெடுத்துள்ளதாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

‘ஆள் கடத்தல்’ தொடர்பான சர்வதேசக் கருத்தரங்கம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து தீபக் மிஸ்ரா பேசியதாவது:

ஆள் கடத்தல் சம்பவங்கள் பல நூற்றாண்டுகளாகவே தொடர்ந்து வருகின்றன. ஒருகாலத்தில், அடிமைகளாக வேலை பார்ப்பதற்காக மட்டுமே மனிதர்கள் கடத்தப்பட்டு வந்தனர். ஆனால், தற்போது, பாலியல் தொழில், குழந்தை தொழிலாளர்கள், பணத்தேவை, உறுப்பு தேவை என பலவற்றுக்காகவும் ஆள் கடத்தல் நடைபெறுகிறது.

சமீபகாலமாக, உலகம் முழுவதுமே கடத்தல் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்திருக்கின்றன. இது, மனிதக் குலத்துக்கும், சமூகத்துக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவாகியுள்ளது. கடத்தல் என்பது சர்வதேச அளவில் லாபம் கொழிக்கும் தொழில் என்பது போல மாறிவிட்டது. இது மிக தீவிரமான பிரச்சினையாகும். இதற்கு நிரந்தரத் தீர்வு காணாவிடில், எதிர்கால சந்ததியினருக்கு இது பேராபத்தை ஏற்படுத்திவிடும்.

ஆள் கடத்தலை ஒழிப்பதில் அரசு அமைப்புகள் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். இதுகுறித்து இளைய சமுதாயத்தினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு தீபக் மிஸ்ரா பேசினார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x