Published : 23 Mar 2018 04:45 PM
Last Updated : 23 Mar 2018 04:45 PM

ஒரு நிமிடத்தில் 31.68 எலிகளை கொல்ல முடியுமா? - மகாராஷ்டிராவில் நடந்த ஒப்பந்த ஊழல்

மகாராஷ்டிர தலைமைச் செயலகத்தில் எலிகளை பிடிப்பதற்காக ஒப்பந்தம் வழங்கப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. ஒரு நிமிடத்தில் 31.68 எலிகளை கொன்றதாக கூறுவதை எப்படி ஏற்க முடியும் என சட்டப்பேரவையில் எம்எல்ஏ கேள்வி எழுப்பினார்.

மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில், பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து பல்வேறு திட்டங்களுக்கான ஒதுக்கீடு தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது. தலைமைச் செயலக செலவுகளுக்கான ஒதுக்கீடு தொடர்பாக நேற்று விவாதம் நடந்தது. அப்போது தலைமைச் செயலகத்தில் எலிகளை பிடிப்பதற்காக ஒப்பந்தம் வழங்கப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதாக புகார் கூறப்பட்டது.

அப்போது நடந்த விவாதத்தில், ஆளும் கட்சியான பாஜக எம்எல்ஏ ஏக்நாத் கட்சே பேசியதாவது:

‘‘தமிழக அரசு அளித்துள்ள புள்ளி விவரங்களின்படி, ஒரு நிமிடத்தில் 31.68 எலிகள் கொல்லப்பட்டுள்ளன. மும்பை மாநகராட்சியில் இரண்டு ஆண்டுகளில் 6 லட்சம் எலிகள் கொல்லப்பட்டுள்ளன. தலைமைச் செயலகத்தில் எலிகளை கொல்வதற்காக தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு எலிக்கு குறிப்பிட்ட தொகை வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் ஒரு வாரத்தில் 3 லட்சத்து 19 ஆயிரத்து 400 எலிகள் கொல்லப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. இதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

அதாவது நாள் ஒன்றுக்கு 45 ஆயிரத்து 628 எலிகள் கொல்லப்பட்டுள்ளன. ஒரு மணிநேரத்தில் 1901.5 எலிகள் கொல்லப்பட்டுள்ளன. அப்படியானால் கொல்லப்பட்ட எலிகளின் அளவை கணக்கீட்டால் 9.125 டன்கள் ஆகும். கொல்லப்பட்ட எலிகள் எங்கே உள்ளன. அவை புதைக்கப்பட்டால் எங்கு புதைக்கப்பட்டன.

எலிகளை கொல்வதற்கு ஆறு மாத காலத்திற்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இரண்டு மாதங்களில் இந்த பணியை செய்து முடித்து விட்டதாக கூறி அவர்களுக்கு பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே எலியை பயன்படுத்தி நடந்த இந்த ஊழல் குறித்து விசாரணை செய்யப்பட வேண்டும்.

தலைமைச் செயலகம் முன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட விவசாயி தர்மா பாட்டீல், எலி மருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். தலைமைச் செயலகத்தில் அவருக்கு எலி மருந்து எப்படி கிடைத்தது? எலிகளை கொல்வதற்காக தலைமைச் செயலகத்திற்கு கொண்டு வரப்பட்ட மருந்தை சாப்பிட்டே தர்மா பாட்டீல் தற்கொலைக்கு முயன்றுள்ளார். எனவே இதுபற்றி விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x