Last Updated : 09 Mar, 2018 09:07 AM

 

Published : 09 Mar 2018 09:07 AM
Last Updated : 09 Mar 2018 09:07 AM

மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு: காவிரி விவகாரத்தில் கர்நாடக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பது என்று கர்நாடக மாநில அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு எடுக்கப் பட்டுள்ளது.

காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 16-ம் தேதி இறுதி தீர்ப்பு வழங்கியது. அதில், த‌மிழகத்துக்கு வழங்கப்பட்ட நீரின் அளவை குறைத்து, கர்நாடகாவுக்கு கூடுதலாக 14.75 டிஎம்சி நீரை ஒதுக்கியது. அதேசமயத்தில், ஆறு வாரங்களுக்குள்ளாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு கர்நாடகாவில் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக கர்நாடக மாநில அனைத்துக் கட்சிக் கூட்டம் பெங்களூருவில் நேற்று மாலை நடைபெற்றது. கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல், பாஜக சார்பாக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், மஜத பொதுச்செயலாளர் ஒய்.எஸ்.வி.தத்தா, காவிரி நீர்ப்பாசன கழக அதிகாரிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். எனினும், தேவகவுடா, எடியூரப்பா, குமாரசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

கூட்டத்தில், பாஜக சார்பாக பேசிய முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், “காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது கர்நாடக விவசாயிகளை நிச்சயம் பாதிக்கும். எனவே, இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் உரிய முறையில் எடுத்துக்கூறி, காவிரி மேலாண்மை வாரியம் அமைவதை தடுப்பது மாநில அரசின் தலையாய கடமை.

இந்த விவகாரத்தில், தமிழக அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கையை கண்காணித்து, கர்நாடக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். இதேபோல், கூட்டத்தில் பங்கேற்ற மற்ற கட்சி உறுப்பினர்களும், விவசாயப் பிரதிநிதிகளும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை எதிர்க்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், இந்த விவகாரத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒற்றுமையாக செயல்பட்டு மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இந்தக் கூட்டத்துக்கு பிறகு முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறுகையில், “காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவிப்பது என இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x