

தமிழகத்தில் பிரபலமாக இருக்கும் ‘அம்மா உணவகம்’ போல், உத்தரப் பிரதேசத்திலும் தொடங்க அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் திட்டமிட்டுள்ளார். முதல் கட்டமாக, தொழிலாளர்களுக்கு மட்டும் இந்த உணவக திட்டம் அறிமுகப்படுத்தப் படவுள்ளது.
அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தல் வெற்றிக்கு பின் அடுத்தமுறையும் உத்தரப்பிர தேசத்தில் ஆட்சியைப் பிடிக்க அகிலேஷ் திட்டமிட்டுள்ளார். இதற்காக, தமிழக பாணியில் மேலும் பல இலவசம் மற்றும் மானியத் திட்டங்களை அறிவிக்க இருக்கிறார்.
இந்தப் பட்டியலில் முதலாவதாக தொழிலாளர்களுக்கு, ரூ. 20-க்கும் குறைவாக மானிய விலையில் மதிய உணவு அளிக்க திட்டமிடப்பட் டுள்ளது.
இருவகை உணவு
இது குறித்து ‘தி இந்து’விடம் உ.பி.யின் அதிகாரிகள் வட்டாரம் கூறியதாவது:
தமிழகத்தைப் போல அனைத்து மக்களுக்கும் அம்மா உணவகத்தில் உணவு வழங்கினால், அதிக மக்கள்தொகை கொண்ட உபி.யில் தாக்குப்பிடிக்க முடியாது. எனவே, தொடக்க கட்டமாக தலைநகர் லக்னோவில் பதிவு செய்யப்பட்ட ஐம்பதாயிரம் தொழிலாளர்களுக்கு மட்டும் இந்த சேவை அமல்படுத்தப்படும். இதில் ரொட்டி, பருப்பு, சாதம் மற்றும் சாலட்டுகள் என ஒருவகையும் மற்றொன்றில் வெறும் பூரி மற்றும் காய்கறி இருக்கும்’ என்றனர்.
இந்த திட்டத்துக்கு மூலதனமாக ரூ. 30 கோடியும், ஆண்டுக்கு மானியமாக ரூ.15 கோடியையும் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. இதனை ஓரிரு நாட்களில் அகிலேஷ் யாதவ் அறிவிப்பார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உ.பி.யில் தொடர்ந்து 90 நாள் வேலை செய்யும் ஒரு தொழிலாளி, அம்மாநில அரசின் தொழிலாளர் மற்றும் அமலாக்கப் பிரிவு துறையில் பதிவு செய்து அடையாள அட்டை பெறலாம். இந்த அட்டைகளை கொண்டவர்களுக்கு மட்டுமே மானிய விலை மதிய உணவு அளிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, லக்னோவில் மட்டும் 45,000 பேர் பதிவு பெற்ற தொழிலாளர்களாக உள்ளனர்.
இந்த பணியை உபி மாநில கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு சார்பில் முக்கிய இடங்களில் சமைத்து, மதியம் மட்டும் விநியோகம் செய்ய இருக்கிறார்கள். இதன் வெற்றியை பொறுத்து மற்ற நகரங்களிலும் இந்த திட்டம் அமல்படுத்த உள்ளது.
உ.பி.வாசிகளின் முக்கிய உணவான ரொட்டியை அதிக அளவில் தயார் செய்வது குறித்து அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.
மானிய விலை குடிநீர்
இதேதுறையின் சார்பில் இப்போது ரூ.20-க்கு ஒரு லிட்டர் குடிநீர் ‘பராக் பாணி’ என்ற பெயரில் விநியோகிக்கப்படுகிறது. இதில், மாநில அரசின் ‘வாட்’ வரியைக் குறைத்து, மானியத்துடன் ரூ.10-க்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ராஜஸ்தானிலும் அறிமுகம்
ஏற்கெனவே, இந்த திட்டத்தை தம் மாநிலத்தில் உழவர் சந்தைகளில் விவசாயிகளுக்கு மட்டும் அறிமுகப்படுத்த ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே திட்டமிட்டார். இதற்காக அவரது அதிகாரிகள் குழு, தமிழகத்தின் அம்மா உணவகங்களை பார்வை இட்டுச் சென்றது. இது குறித்து ‘தி இந்து’வில் கடந்த ஜனவரி 13-ம் தேதி விரிவான செய்தி வெளியானது.