Published : 24 Mar 2018 08:39 AM
Last Updated : 24 Mar 2018 08:39 AM

மகாராஷ்டிராவில் புற்றுநோயால் பாதித்த சிறுவனுக்கு ஒரு நாள் இன்ஸ்பெக்டர் பதவி: மும்பை போலீஸாருக்கு குவியும் பாராட்டு

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுவனுக்கு, அவனது விருப்பப்படி ஒரு நாள் இன்ஸ்பெக்டர் பொறுப்பு வழங்கிய மும்பை காவல் துறையினருக்கு பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த சிறுவன் ஆர்பித் மண்டல் (7). இவனுக்கு அண்மையில் நுரையீரல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த சிறுவனுக்கு, புற்றுநோய் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு லட்சியம் இருப்பது போல, இந்த சிறுவனுக்கும், தான் வருங்காலத்தில் ஒரு காவல் ஆய்வாளராக (இன்ஸ்பெக்டர்) வர வேண்டும் என்ற கனவு இருந்தது. இந்நிலையில், தமது விருப்பத்தை அந்த சிறுவன் தன் பெற்றோரிடம் கூறியுள்ளான்.

ஆசை நிறைவேற்றம்

மகனின் விருப்பத்தை நிறைவேற்ற நினைத்த அவனது பெற்றோர், இதுகுறித்து மும்பையில் உள்ள முலுந்த் காவல் நிலையத்தை தொடர்புகொண்டு தெரிவித்தனர். இதற்கு உடனடியாக சம்மதமும் கிடைத்தது. இதனையடுத்து, முலுந்த் காவல் நிலையத்துக்கு சிறுவன் ஆர்பித் மண்டல் நேற்று அழைத்துச் செல்லப்பட்டான். அப்போது, அவனுக்கு இன்ஸ்பெக்டர் உடையும், தொப்பியும் அணிவிக்கப்பட்டன. பின்னர், ஒருநாள் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்கும் படிவத்தில் சிறுவன் மண்டல் கையெழுத்திட்டான். இதனைத் தொடர்ந்து, சிறுவனுக்கு அங்கிருந்த போலீஸார் இனிப்புகளை ஊட்டிவிட்டு மகிழ்வித்தனர்.

இந்நிலையில், இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் போலீஸார் வெளியிட்டனர். போலீஸாரின் அன்பைக் கண்டு நெகிழ்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், முலுந்த் போலீஸாருக்கு பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x