Last Updated : 07 Mar, 2018 08:37 AM

 

Published : 07 Mar 2018 08:37 AM
Last Updated : 07 Mar 2018 08:37 AM

தொழிலதிபர் அசோக் கெனி காங்கிரஸில் இணைந்தார்: கர்நாடக அரசியலில் பரபரப்பு

கர்நாடகாவை சேர்ந்த தொழிலதிபரும், சுயேட்சை எம்எல்ஏ-வுமான அசோக் கெனி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளதால், அம்மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆட்சியை பிடிக்கும் நோக்கத்தில் மற்ற கட்சிகளில் செல்வாக்கு மிக்க பிரமுகர்களை தங்கள் கட்சிக்கு இழுக்கும் வேலைகளிலும் ஈடுபட்டுள்ளனர். நந்தி குழும தலைவரும், பீதர் தெற்கு தொகுதியின் சுயேட்சை எம்எல்ஏ-வுமான அசோக் கெனி, சில மாதங்களுக்கு முன்பு பாஜகவில் இணையப்போவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், அசோக் கெனி நேற்று முன் தினம் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஷ்வர் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பெங்களூருவில் அக்கட்சியின் அலுவலகத்தில் நடந்த இணைப்பு விழாவில், ஆயிரக்கணக்கான தொண்டர்களும் காங்கிரஸில் இணைந்தனர். பின்னர் முதல்வர் சித்தராமையாவின் வீட்டுக்கு சென்று, அசோக் கெனி ஆசிபெற்றார்.

அசோக் கெனி திடீரென காங்கிரஸில் இணைந்ததற்கு பாஜக, மஜத ஆகிய அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மஜத மாநில தலைவர் குமாரசாமி, ‘‘நைஸ் சாலை அமைப்பதில் பெரிய அளவில் மோசடியில் ஈடுபட்டுள்ள நபரை, காங்கிரஸார் தங்களது கட்சியில் சேர்த்திருப்பது ஏற்புடையதல்ல. காங்கிரஸின் இந்த செயலுக்கு மக்கள் தேர்தலில் தக்கப் பாடம் புகட்டுவார்கள்'' என தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பீதர் தொகுதியில் அசோக் கெனிக்கு எதிராக பாஜக, மஜத ஆகிய கட்சிகளின் தொண்டர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அசோக் கெனியை கண்டித்து முழக்கங்களை எழுப்பி, அவரது உருவ பொம்மையை கொளுத்தினர். சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் வேளையில் அசோக் கெனி காங்கிரஸில் இணைந்துள்ளதால், கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x