Published : 09 Mar 2018 08:18 AM
Last Updated : 09 Mar 2018 08:18 AM

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததால் மத்திய அமைச்சரவையிலிருந்து தெலுங்கு தேசம் விலகல்: மாநில அரசில் இருந்து பாஜக அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர்

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாததால் மத்திய அமைச்சரவையிலிருந்து தெலுங்கு தேசம் நேற்று விலகியது. அந்த கட்சியை சேர்ந்த 2 அமைச்சர்கள் நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடியிடம் ராஜினாமா கடிதங்களை வழங்கினர்.

இதேபோன்று ஆந்திர அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பாஜகவை சேர்ந்த 2 அமைச்சர்களும் தங்களது பதவியை நேற்று ராஜினாமா செய்தனர்.

ஒருங்கிணைந்த ஆந்திராவில் இருந்து தெலங்கானா மாநிலத்தைப் பிரித்தபோது, புதிதாக உருவாகும் ஆந்திராவுக்கு உதவும் வகையில் 19 அம்ச மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன்படி ஆந்திர மாநிலத்துக்கு 10 ஆண்டுகள் வரை சிறப்பு அந்தஸ்து வழங்குவது, போலாவரம் அணைக்கட்டு திட்டத்துக்கு சிறப்பு நிதி வழங்குவது, கடப்பாவில் இரும்பு தொழிற்சாலை அமைப்பது, மத்திய கல்வி நிறுவனங்களை ஆந்திராவில் அமைப்பதற்கான அனுமதி வழங்குவதோடு அதற்கான நிதியை ஒதுக்குவது, விசாகப்பட்டினத்தில் தனி ரயில்வே அமைப்பை உருவாக்குவது, தலைநகரத்துக்கு நிதி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் மசோதாவில் கூறப்பட்டிருந்தன.

இவற்றை நிறைவேற்ற கோரி, பாஜகவுடன் தெலுங்கு தேசம் கூட்டணி அமைத்தது. கடந்த 2014-ம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து தேர்தலை சந்தித்தன. ஆந்திராவில் தெலுங்கு தேசம் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. சந்திரபாபு நாயுடு முதல்வரானார். இதேபோன்று, மத்தியில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் தெலுங்கு தேசமும் இணைந்தது.

மத்தியில் கூட்டணி கட்சி ஆட்சி நடைபெறுவதால் ஆந்திராவுக்கு தேவையான அனைத்து நிதிகளையும் பெற்று மாநிலத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லலாம் என நாயுடு தீர்மானித்தார். ஆனால், 14-வது திட்ட கமிஷன் விதிகளின்படி , ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க இயலாது, அதற்கு பதிலாக சிறப்பு நிதி வழங்குவதாக மத்திய அரசு தெரிவித்தது. இதற்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு ஒப்புக்கொண்டார்.

ஆனால், மத்திய அரசு தெரிவித்தபடி கடந்த 4 ஆண்டுகளில் சிறப்பு நிதிகள் வழங்கப்படவில்லை என தெலுங்கு தேசம் குற்றம் சாட்டியுள்ளது. இதற்காக 29 முறை டெல்லிக்கு சென்ற போதிலும் பயனில்லை என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். இதனிடையே, மத்திய பட்ஜெட்டிலாவது ஆந்திர மாநிலத்துக்கு வழங்க வேண்டிய சிறப்பு நிதிகள் அறிவிக்கப்படும் என்று அவர் காத்திருந்தார். ஆனால், பட்ஜெட்டில் இது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடனும், எம்பிக்களுடனும் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினார். இதனிடையே, ஆந்திர மாநில பாஜக தலைவர்கள் தெலுங்கு தேச கட்சியை விமர்சனம் செய்ய தொடங்கினர். இதனால், இரு கட்சிகளுக்குமிடையே பனிப்போர் தொடங்கியது.

மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண், கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இது தொடர்பாக பிரதமர் மோடி, நிதி அமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோரிடம் சந்திரபாபு நாயுடு தொலைபேசியில் அடிக்கடி பேசி வந்தார்.

அடுத்த ஆண்டு ஆந்திராவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சிறப்பு அந்தஸ்து அல்லது சிறப்பு நிதி குறித்த திட்ட அறிவிப்பை மத்திய அரசிடமிருந்து ஆந்திர அரசு மிகவும் எதிர்பார்த்தது. ஆனால், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க இயலாது என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நேற்றுமுன்தினம் திட்டவட்டமாக அறிவித்தார்.

இதனை தொடர்ந்து, அன்றிரவு விஜயவாடாவில் உள்ள தனது வீட்டில் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகளுடன் சந்திரபாபு நாயுடு அவசர ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் இரவு 11 மணியளவில் அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, “மாநில பிரிவினை மசோதாவில் தெரிவித்தபடி மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசு தவறிவிட்டது. சிறப்பு நிதியைக் கூட வழங்காமல் கடந்த 4 ஆண்டுகளாக ஏமாற்றிவிட்டது. இதன் காரணமாக மத்திய அமைச்சர்களாக உள்ள தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த அசோக் கஜபதி ராஜு, சுஜனா சவுத்ரி ஆகியோர் வியாழக்கிழமை தங்களது பதவிகளை ராஜினாமா செய்வார்கள்” என்று தெரிவித்தார்.

அமராவதியில் உள்ள சட்டப்பேரவையில் நேற்று காலை ஆந்திர பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, தெலுங்கு தேசம் அரசில் அங்கம் வகித்த பாஜகவைச் சேர்ந்த இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் மாணிக்கியால ராவ், மருத்துவத் துறை அமைச்சர் காமிநேனி ஸ்ரீநிவாஸ் ஆகியோர் முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் தங்களது ராஜினாமா கடிதங்களை வழங்கினர்.

இதேபோல டெல்லியில் நேற்று மாலை தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் அசோக் கஜபதி ராஜு, சுஜனா சவுத்ரி ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியை அவரது வீட்டில் சந்தித்து, தங்களது ராஜினாமா கடிதங்களை வழங்கினர். தெலுங்கு தேசம், பாஜக கூட்டணி முறிவால் ஆந்திர அரசியலில் மிகப்பெரிய அளவில் அரசியல் மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாநில அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் சந்திரபாபு நாயுடு அமராவதியில் நேற்றிரவு அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில் தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிப்பதா, வேண்டாமா என்பது போன்ற பல அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சந்திரபாபு நாயுடுவுடன் பேசிய பிரதமர் மோடி

ஆந்திராவில், பாஜகவுடனான கூட்டணியை முறித்து கொள்வதாக புதன்கிழமை இரவு முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பதற்கு முன்பாக பிரதமரிடம் பேச அவர் முயற்சி செய்தார். சுமார் அரை மணி நேரம் வரை தொலைபேசியில், பிரதமரின் அழைப்பிற்காக அவர் காத்திருந்தார். பிரதமரிடம் இருந்து அழைப்பு வராத காரணத்தினால், செய்தியாளர்களிடம் கூட்டணி முறிவு குறித்து நாயுடு விவரித்தார்.

இந்நிலையில், ஆந்திர அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 2 பாஜக அமைச்சர்கள் தங்களது பதவியை நேற்று காலை ராஜினாமா செய்தனர். இதேபோல தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த 2 மத்திய அமைச்சர்கள் பிரதமரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுக்க டெல்லியில் தயாராக இருந்தனர்.

பிரதமர் மோடி நேற்று ராஜஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதால், மாலை 6 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டது. மாலையில் டெல்லி திரும்பிய மோடி, உடனடியாக தொலைபேசி மூலம் சந்திரபாபு நாயுடுவை தொடர்பு கொண்டு சுமார் 20 நிமிடங்கள் பேசினார். அப்போது, தன்னுடைய நிலை குறித்து சந்திரபாபு நாயுடு எடுத்துரைத்தார்.

இதன்பிறகு மத்திய அமைச்சர்கள் அசோக் கஜபதி ராஜு, சுஜனா சவுத்ரி ஆகியோர் டெல்லியில் நேற்று மாலை 6 மணிக்கு அவர்களது சொந்த காரில் பிரதமர் வீட்டுக்கு சென்று அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x