Last Updated : 23 Mar, 2018 05:06 PM

 

Published : 23 Mar 2018 05:06 PM
Last Updated : 23 Mar 2018 05:06 PM

ஆம் ஆத்மி கட்சிக்கு வெற்றி; எம்எல்ஏக்கள் 20 பேரை நீக்கம் செய்த குடியரசுத் தலைவரின் ஒப்புதல் செல்லாது: டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

 

ஆதாயம் தரும் இரட்டைப்பதவி வகித்ததாகக் கூறி பதவி பறிக்கப்பட்ட 20 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செல்லாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

அதேசமயம், இந்த விவகாரத்தை மீண்டும் மறு விசாரணை நடத்த வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

இரட்டை ஆதாயம்

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது. இந்தக் கட்சியின் 20 எம்எல்ஏக்களுக்கு அமைச்சர்களுக்கான செயலாளர்கள் பதவி கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் வழங்கப்பட்டது. ஆனால், ஆதாயம் தரும் இரட்டைப் பதவியில் இருப்பதாகக் கூறி, அவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கூறி டெல்லி காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனுவும், உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.

மேலும் டெல்லி உயர் நீதிமன்றத்திலும் தொடரப்பட்ட வழக்கில், எம்எல்ஏக்கள்,இரட்டைப்பதவி வகித்தது செல்லாது என அறிவிக்க கோரப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த உயர் நீதிமன்றம், துணை நிலை ஆளுநர் அனுமதி இல்லாமல் அமைச்சர்களுக்கான செயலாளர் பதவியை எம்எல்ஏக்களுக்கு முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வழங்கியது செல்லாது என கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது.

விசாரணை

இதையடுத்து, எம்எல்ஏக்கள் 19 பேரும் செயலாளர்கள் பதவியை இழந்தனர். இதற்கிடையே ரஜவுரி கார்டன் தொகுதி எம்எல்ஏ ஜர்னைல் சிங் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இவரோடு சேர்த்து மொத்தம் 20 பேர் மீது தேர்தல் ஆணையம் விசாரணையைத் தொடங்கியது.

ஆனால், தாங்கள் இரட்டை ஆதாயம் பதவியை இழந்துவிட்டதால், தங்கள் மீதான விசாரணையைக் கைவிட வேண்டும் என்று எம்எல்ஏக்கள் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை மனுவும் அளித்தனர்.

ஆனால், அதை நிராகரித்த தேர்தல் ஆணையம் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தது. மேலும், ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் 20 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டது. ஆனால், 20 எம்எல்ஏக்கள் தெரிவித்த விளக்கம் மனநிறைவு அளிக்கவில்லை.

ஒப்புதல்

இதனால், கடந்த ஜனவரி மாதம் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு பரிந்துரை செய்தது. இந்தப் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர் ராமநாத் கோவிந்த், கடந்த ஜனவரி 20-ம் தேதி 20 எம்எல்ஏக்கள் நீக்கத்துக்கு ஒப்புதல் அளித்தார்.

இந்நிலையில் 20 எம்எல்ஏக்களும் தங்களை தகுதிநீக்கம் செய்தது செல்லாது என அறிவிக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு கடந்த பிப்ரவரி மாதம் 7-ம் தேதியில் இருந்து நாள்தோறும் விசாரணை நடந்து வந்தது.

வாய்ப்பு அளிக்கப்படவில்லை

வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, சந்தர் சேகர் ஆகியோர் இன்று 76 பக்கங்களில் பரபரப்பு தீர்ப்பு அளித்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் 20 பேரை தகுதிநீக்கம் செய்து தேர்தல் ஆணையம் பரிந்துரைக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல், மத்திய அரசின் அறிவிக்கை செல்லாது என அறிவிக்கிறோம். 20 எம்எல்ஏக்கள் நீக்கம் செய்த தேர்தல் ஆணையத்தின் பரிந்துரை என்பது மோசமானதாகும். எம்எல்ஏக்கள் 20 பேருக்கும் வாய்மொழியாக எந்தவிதமான விளக்கமும் அளிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இயற்கை நீதிக்கு எதிரானது

இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் குடியரசுத் தலைவருக்கு ஒப்புதலுக்காக அனுப்பியது என்பது, இயற்கை நீதியின் கொள்கைகளுக்கு இணங்கி செயல்படாமல், சட்டத்தை மோசமாகக் கையாண்டு, அதற்கு களங்கம் கற்பிக்கப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் மனுக்களை மீண்டும் தேர்தல் ஆணையம் மறுபரீசீலனை செய்ய வேண்டும், அவர்கள் இரட்டை பதவி வகித்ததால் தகுதிசெய்யப்பட வேண்டியவர்களா என்பதை மீண்டும் ஆய்வு செய்யப்பட வேண்டும். ஆனால், இதற்கு முந்தைய தீர்ப்பின் எந்தபாதிப்பின்றி இது நடைபெற வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

மகிழ்ச்சி

இந்தத் தீர்ப்பைக் கேட்டதும், நீதிமன்றத்தில் குழுமி இருந்த எம்எல்ஏக்கள் 20 பேரும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துத் தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x