Last Updated : 25 Mar, 2018 10:36 AM

 

Published : 25 Mar 2018 10:36 AM
Last Updated : 25 Mar 2018 10:36 AM

தண்ணீர் இல்லா நகரமாக மாறும் பெங்களூரு!- அச்சுறுத்தும் ‘வறட்சி’ புள்ளி விவரங்கள்.. இனிமேலாவது விழித்துக்கொள்ளுமா அரசு?

தெ

ன்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரம் உலக அளவில் தண்ணீர் இல்லாத நகரமாக மாறி இருக்கிறது. ஒரு மிடக்கு நீரை குடித்து உயிரை காத்துக்கொள்ள மக்கள் வரிசையில் காத்துக்கொண்டிருப்பது பூமியின் பேரவலம். அத்தகைய அவலத்தை நோக்கி பெங்களூரு நகரம் போய் கொண்டிருப்பதாக அண்மையில் வெளியான ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உலக அளவில் குடிநீரின்றி தவிக்கப்போகும் நகரங்களின் பட்டியலை கடந்த மாதம் பிபிசி வெளியிட்டது. அந்த‌ ஆய்வுக் கட்டுரையில், பெங்களூரு 2-வது இடத்தை பிடித்திருந்தது. திட்டமிடப்படாத நகரமயமாக்கலும், புற்றீசல் போல வளர்ந்துவரும் கட்டிட மயமாக்கலும்தான் பெங்களூருவின் இந்த நிலைக்கு முக்கிய காரணம் என அதில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இதே போல ஐ.நா. சபையின் சுற்றுச்சூழல் பிரிவு அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், '' உலக அளவில் நீர் இல்லாத முதல் நகரம் என்கிற ஆபத்தான நிலையை கேப் டவுன் (தென்னாப்பிரிக்கா) எட்டியுள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் கராச்சி (பாகிஸ்தான்), பெய்ஜிங் (சீனா), பெங்களூரு (இந்தியா) உள்ளிட்ட நகரங்களும் அந்த ஆபத்தான நிலையை நோக்கி வேகமாக சென்று கொண்டிருக்கின்றன.

இதே வேகத்தில் சென்றால் கேப் டவுன் அடைந்துள்ள 'டே ஜீரோ' (குடிநீர் குழாய்கள் மூலம் வீடுகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் செல்லும் நீர் விநியோகத்தை அரசு நிறுத்தும் நாளே 'டே ஜீரோ' என அழைக்கப்படுகிறது.) பெங்களூரு உள்ளிட்ட நகரங்களும் 'டே ஜீரோ' எனும் ஆபத்தான‌ நிலையை விரைவில் எட்ட வாய்ப்பு இருக்கிறது'' என குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த சர்வதேச நீர் தினத்தை முன்னிட்டு மத்திய அரசின் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் துறை, ‘வறட்சி நகரங்கள்' குறித்த ஆய்வ‌றிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் 2030-ம் ஆண்டுக்குள் தண்ணீர் இல்லாத நகரமாக பெங்களூரு, புனே உள்ளிட்ட நகரங்கள் மாற வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி தொடர்ச்சியாக வெளியாகும் 'வறட்சி' குறித்த‌ புள்ளி விவரங்களால் பெங்களூருவாசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அசுர வேக வளர்ச்சியின் ஆபத்து

கிபி 1531-ல் கெம்பே கவுடா மன்னரால் உருவாக்கப்பட்ட பெங்களூரு, காடுகளும், மரங்களும், நீர் நிலைகளும் நிறைந்திருந்ததால் குளுகுளு நகரமாக இருந்தது. இந்த தட்பவெப்ப நிலை ஆங்கிலேயருக்கு உகந்ததாக இருந்ததால், சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு இடம்பெயர்ந்தனர். 1956-ல் மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து பெங்களூரு பிரிக்கப்பட்ட பிறகு, அன்றைய‌ மைசூரு மாநிலத்தின் தலைநகராக மாற்றப்பட்டது. இதனால் பெங்களூருவின் காடுகள் அழிக்கப்பட்டு நகரங்களாகவும், மரங்கள் வெட்டப்பட்டு சாலைகளாகவும் மாற்றப்பட்டன.

2000-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவின் சிலிகான் வேலியாக பெங்களூரு மாறத் தொடங்கியதில் இருந்து, அதன் அசல் தன்மையை இழக்கத் தொடங்கியது. கிராமங்கள், ஏரி, குளங்கள் மிக வேகமாக நகரமாக மாறின. திரும்பிய திசையெங்கும் பன்னாட்டு நிறுவனங்களும், தொழிற்சாலைகளும், வானுயர கட்டிடங்களும் புற்றீசல் போல பெருகின. இதன் காரணமாக பெங்களூருவில் காலி இடங்களே இல்லாத நிலை உருவாகியிருக்கிறது. திட்டமிடப்படாத நகர மயமாக்கலும், அசுர வேகத்தில் பெருகிவரும் கட்டிடங்களும் பெங்களூருவை மோசமான நகரமாக மாற்றிவிட்டன.

இந்நிலையில் பெங்களூரு பெருநகர வளர்ச்சிக் கழகம், ‘‘1973-ல் பெங்களூரு நிலப்பரப்பில் 8 சதவீதம் மட்டுமே கட்டிடங்கள் கட்டப்பட்டிருந்தன. 2017-ல் இதன் அளவு 77 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. இதே வேகத்தில் பெங்களூரு நகரம் வளர்ந்தால் 2020-ல் 95 சதவீதம் க‌ட்டிட காடாகவே மாறிவிடும். 2011-ல் 90 லட்சமாக இருந்த மக்கள்தொகை தற்போது 1.2 கோடியாக அதிகரித்திருக்கிறது. இதே வேகத்தில் மக்கள்தொகை அதிகரித்தால் 2030-ல் பெங்களூருவின் மக்கள் தொகை 2 கோடியாக இருக்கும். பெங்களூரு கட்டுப்படுத்த முடியாத அளவில் வளர்வதால், நகருக்கு வெளியே 90 கிமீ தூரத்தில் கோலார் தங்கவயலில் 'புதிய பெங்களூரு நகரம்' உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது'’ என அறிவித்திருக்கிறது.

நீர் நிலைகளை அழித்ததன் விளைவு

‘‘1800-களில் பெங்களூருவில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏரிகள் இருந்தன. பெங்களூருவின் குடிநீர் தேவையை அந்த ஏரிகளே பூர்த்தி செய்தன. ஆண்டு முழுவதும் பெய்யும் மழையை 35டிஎம்சி அளவுக்கு தேக்கி வைக்கும் அளவுக்கு அந்த ஏரிகள் பெரிதாக இருந்தன. ஆனால் தற்போது 2 டிஎம்சி நீரை கூட தேக்கி வைக்க பெங்களூருவில் ஏரிகள் இல்லை. ஏனென்றால் 50-க்கும் மேற்பட்ட ஏரிகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு ஏரியின் நீரை கூட குடிநீருக்காக பயன்படுத்த முடியாத, கழிவு நீர் கால்வாய்களாக இருக்கின்றன.

பெங்களூருவை சுற்றியிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து குளங்கள், குட்டைகள் அனைத்தும் கட்டிடங்களாக மாறியுள்ளன. இதனால் ஆண்டுதோறும் பெய்யும் குறைந்த அளவிலான மழையை கூட சேமிக்க இடமில்லை. லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டு பேருந்து, ரயில், மெட்ரோ ரயில் என உருவானதால் மழைப்பொழிவின் அளவும் கணிசமாக குறைந்திருக்கிறது.

1971-ல் பெங்களூருவில் 5000 கிணறுகளும், ஆழ்துளை கிணறுகளும் இருந்துள்ளன. இப்போதோ 45 லட்சம் கிணறுகளும் ஆழ்துளை கிணறுகளும் இருக்கின்றன. நிலத்தடி நீர் அளவுக்கு அதிகமாக உறிஞ்சப்பட்டதால் 1500 அடி ஆழம் வரை ஆழ்துளை கிணறு அமைத்தாலும் போதிய நீர் கிடைப்பதில்லை. இவ்வாறு அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகளில் இருந்து எடுக்கப்பட்ட நீர் கோடை காலங்களில் ஒரு டேங்கர் லாரி 500 ரூபாய் முதல் 1200 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

மரங்களையும், நீர் நிலைகளையும் அழித்து தொழில் நிறுவனங்களையும், அடுக்குமாடி குடியிருப்புகளையும், பூங்காக்களையும் உருவாக்கியதால் பெங்களூரு இந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது'' என்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலர் வாசுதேவன்.

எப்படி காப்பது?

‘‘பெங்களூரு மாநகரம் 225 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கிறது. இதன் நீர் தேவையை காவிரி ஆறும், நிலத்தடி நீருமே பூர்த்தி செய்கின்றன. தற்போது கிடைக்கும் நீரைக் கொண்டு பெங்களூருவின் நீர் தேவையை பூர்த்தி செய்யமுடியவில்லை என கர்நாடக அரசே ஒப்புக்கொண்டுள்ளது. அதாவது பெங்களூருவில் சராசரியாக ஒரு குடிமகனுக்கு ஒரு நாளைக்கு 100 லிட்டர் நீர் வழங்கப்படுகிறது. 2022-ல் இந்த நீரின் அளவு 80 லிட்டராக குறைக்கப்படும் என பெங்களூரு குடிநீர் விநியோக வாரியம் தெரிவிக்கிறது.

எனவே பெங்களூருவின் நீர் தேவைக்கு முதல்கட்டமாக‌ அழிக்கப்பட்ட நீர் நிலைகளை மீண்டும் மீட்டெடுக்க வேண்டும். ஆண்டுதோறும் பொழியும் மழை நீரை வீடுகள், தொழிற்சாலைகள் தோறும் கட்டாயம் சேகரிக்க வேண்டும். வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக, புதியதாக 10 மரங்கள் வீதம் அதிகமாக நட வேண்டும். அடுத்ததாக நகர்ப்புற பகுதியை முறையாக திட்டமிட்டு உருவாக்க வேண்டும். இவற்றை எல்லாம் செய்தால்தான் பெங்களூரு எதிர்நோக்கி இருக்கும் வறட்சி பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்'' என்கிறார் இந்திய அறிவியல் கழகத்தின் ஆய்வாளர் ராமச்சந்திரா.

2030-ல் தீர்வு

பெங்களூரு மாநகர மேயர் சம்பத் குமார் கூறும்போது, ‘‘உலகம் முழுவதும் தண்ணீர் பிரச்சினை பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. பெங்களூரு தண்ணீர் இல்லாத நகரமாக மாறும் என வெளியாகியுள்ள ஆய்வறிக்கைகள் அதிர்ச்சியாக உள்ளன. இதனை சரி செய்ய கர்நாடக அரசும், பெங்களூரு மாநகராட்சியும் பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை தீட்டி வருகின்றன.

பெங்களூருவின் குடிநீர் தேவைக்கு மட்டும் ஆண்டுதோறும் 30 டிஎம்சி நீர் தேவைப்படுகிறது. இதுவரை காவிரி ஆற்றில் இருந்து பெங்களூருவுக்கு 18.25 டிஎம்சி நீர் வழங்கப்பட்டது. தற்போது உச்சநீதிமன்றம் கூடுதலாக 4.75 டிஎம்சி நீரை ஒதுக்கியுள்ளது. இந்த 23 டிஎம்சி நீரைக் கொண்டு ஓரளவு சமாளிக்க முடியும். ரூ.5,500 கோடி செலவில் 5-வது காவிரி குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் 2023-ல் நிறைவடையும். இதே போல வட கர்நாடகாவில் பாயும் நேத்ராவதி நீரை பெங்களூருவுக்கு கொண்டுவரும் திட்டம் 2030-ல் முடிவுக்கு வரும்.

இதனிடையே ஏரிகளை தூர் வாருவது, குளங்களை பராமரிப்பது, மரம் நடுவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெங்களூருவில் வீடுகள் தோறும் மழைநீர் சேகரிப்பு திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே பெங்களூரு வறட்சி பாதிக்காத வகையில் பார்த்துக்கொள்ளப்படும் என நம்புகிறேன்'' என்றார்.

இனிமேலாவது அரசும், மக்களும் விழித்துக்கொண்டால்தான் பெங்களூரு நகரைக் காப்பாற்ற முடியும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x