

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இணைக்கப்பட் டுள்ள 9 தனியார் நிறுவனங்கள், தங்களின் சொத்து மதிப்பு பட்டியலைத் தாக்கல் செய்ய வேண்டும் என, கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரும் தனியார் நிறுவனங்களின் மனு மீதான விசாரணையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட் டுள்ளது.
பெங்களூர் சிறப்பு நீதிமன்றத் தில் நடைபெற்று வரும் ஜெய லலிதா, சசிகலா ,சுதாகரன் மற்றும் இளவரசி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் 32 தனியார் நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இதில், லெக்ஸ் பிராப்பர்ட்டீஸ், மெடோ அக்ரோ ஃபார்ம் உள்ளிட்ட 9 தனியார் நிறுவனங்கள் தங்களு டைய நிறுவனங்களை வழக்கி லிருந்து விடுவிக்குமாறு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கடந்த மாதம் மனு தாக்கல் செய்திருந்தன.
லெக்ஸ் பிராப்பார்ட்டீஸ் உள்ளிட்ட 9 தனியார் நிறுவனங் களின் மனு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி அரவிந்த் குமார் முன்னிலையில் புதன் கிழமை விசாரணைக்கு வந்தது. தனியார் நிறுவனங்கள் தாக்கல் செய்துள்ள மனுவில், “ஜெய லலிதா உள்ளிட்ட நால்வரும் எங்களுடைய நிறுவனங்களில் இயக்குநராகவோ, செயல் அதி காரியாகவோ பொறுப்பு வகிக்க வில்லை.
எங்கள் நிறுவனங்களுடன் ஜெயலலிதா நேரடியாகவோ, மறைமுகமாகவோ இணைந்து செயல்படவில்லை. சசிகலா உள் ளிட்ட மற்றவர்கள் பங்குதாரராக இருந்த காரணத்தினாலே, அது அவர்களுடைய சொத்தாக கருத முடியாது. எனவே எங்களுடைய 9 தனியார் நிறுவனங்களையும் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து உடனடியாக விடுவிக்க வேண்டும்'' என கோரப்பட்டிருந்தது.
இதற்கு பதில் அளித்து அரசு வழக்கறிஞர் பவானிசிங் வாதிடும் போது, ''இந்த 9 தனியார் நிறுவனங் களின் மனு ஏற்கெனவே பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் வழக்கை இழுத்தடிக்கும் நோக்கத்தில் தனியார் நிறுவனங்கள் மனு தாக்கல் செய்திருப்பதாக நீதிபதி டி'குன்ஹா கண்டனம் தெரிவித்தார்.
அதுமட்டுமில்லாமல் குற்றவி யல் பிரிவில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்த 9 தனியார் நிறுவனங்களும் தற்போது சிவில் வழக்காக மாற்றி தொடுத்துள்ளன. எனவே தனியார் நிறுவனங்களின் மனுக்களை உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும்''என்றார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதி அரவிந்த்குமார் 'வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை வியாழக் கிழமைக்கு ஒத்தி வைக்கப் படுகிறது. அப்போது 9 தனியார் நிறுவனங்களும் சொத்துமதிப்பு பட்டியலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்''என உத்தரவிட்டார்.