Last Updated : 21 Mar, 2018 08:20 PM

 

Published : 21 Mar 2018 08:20 PM
Last Updated : 21 Mar 2018 08:20 PM

ஃபேஸ்புக் தகவல்கள் திருடப்படுகிறதா? கேம்பிரிட்ஜ் அனலிட்டிகாவை பார்த்து மோடி அரசு ஏன் கொதிக்கிறது?

உலகை இன்று சிறிய கிராமமாக இணையம் சுருக்கி வைத்திருக்கிறது என்றால், முகம் தெரியாத பலரையும், பல்வேறு நாட்டவரையும் இணைத்து வைத்துள்ளது ஃபேஸ்புக் என்றுகூறலாம்.

ஃபேஸ்புக் என்ற பெயர் தெரியாத இளைஞர்களை இன்று உலகளவில் பார்ப்பது மிக ஆபூர்வம் என்ற நிலைதான் இருக்கிறது. 14 வயது நிரம்பிய எவரும் ஃபேஸ்புக்கில் தங்களின் விவரங்களை சுயமாகப் பதிவு செய்து, அதில் உறுபினராகலாம் என்ற உறுதியோடு ஃபேஸ்புக் செயல்பட்டு வருகிறது.

ஒவ்வொருவருக்கும் தரப்பட்டுள்ள பிரத்யேக கடவுச் சொல் (பாஸ்வேர்ட்) போன்றவைதான் தனிமனித அந்தரங்கத் தகவல்கள் பாதுகாப்புக்கு உதவுகின்றன. அதுவே நண்பர்களாக இணைந்துவிட்டால் ஒருவருக்கு ஒருவர் தகவல்களையும், பரஸ்பர விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளவும் அனுமதிக்கிறது.

தன்னுடைய அந்தரங்கத் தகவல்களை தன்னை மீறி யாரும் பார்க்க முடியாது என்று மிகப் பெரிய நம்பிக்கை சக்கரத்தின் மீது தான் இத்தனை காலமும் ஃபேஸ்புக்கில் பயனாளிகள் பயணித்துக்கொண்டிருந்தனர். ஆனால், அவர்களின் ஒட்டுமொத்த நம்பிக்கைக்கும் வேட்டு வைக்கும் வகையில் சமீபத்தில் தகவல்கள் கசிந்துள்ளன.

நமக்கே தெரியாமல் நமது தகவல்கள் திருடப்பட்டு ஆய்வு செய்யப்படுகின்றன என்பதுதான். இந்தக் குற்றச்சாட்டு இந்தியாவில் இப்போது வைக்கப்படவில்லை என்றாலும், அதற்கான அபாயச் சங்கு மத்திய அரசால் இன்று ஊதப்பட்டுவிட்டது.

ஆனால், 2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜெயிக்கவே மாட்டார் என்று திட்டவட்டமாக கருதப்பட்ட தொழிலதிபர் டொனால்ட் டிரம்ப்பை வெள்ளை மாளிகையில் குடியேற வைத்தது இந்த ஃபேஸ்புக் தகவல்கள்தான் என்றால் நம்ப முடிகிறதா?.

ஆம், லண்டனைச் சேர்ந்த ‘கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா’ என்ற நிறுவனம்தான் ஃபேஸ்புக்கிடம் இருந்து 5 கோடி பயனாளிகளின் தகவல்களைப் பெற்று அவர்களின் மனநிலை, உளவியல் ஆய்வுகள் நடத்தி டிரம்ப் பிரச்சாரத்தை வழிநடத்தி இருக்கிறது. அதன்படி டிரம்ப் பிரச்சாரம் செய்து, மக்கள் மனதில் செயற்கையான மாற்றத்தை உண்டாக்கி தேர்தலில் வென்றுள்ளார் என்பதுதான் லேட்டஸ்ட் தகவலாகும்.

இந்தத் தகவல்கள் அனைத்தையும், இங்கிலாந்தில் உள்ள சேனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்தின் ‘விசிலூதி’ கிறிஸ்டோபர் வெய்லி இந்த விவகாரத்தை வெளியில் கொண்டு வந்துள்ளார்.

யார் இந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா?

லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்தை அலெக்சாண்டர் நிக்ஸ் என்பவர் உருவாக்கினார்.

தேர்தல் ஆலோசனைகளையும், தொழில் நிறுவனங்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் வாடிக்கையாளர்கள், மக்களின் நடத்தைகளை ஆய்வு செய்து தகவல்களையும், மாற்றத்தையும் உண்டு செய்யும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் கடந்த 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

அதாவது கோடிக்கணக்கில், லட்சக்கணக்கில் நுகர்வோர்களின் விவரங்களை ஆய்வு செய்து, ஒழுங்குபடுத்தி, அவர்களின் நடத்தைகளை உளவியல் ரீதியாக ஆய்வு செய்து நிறுவனங்களுக்கு அளிக்கும் பணியை இது பிரதானமாகச் செய்துவருகிறது.

அமெரிக்கத் தேர்தலுக்கு என்ன தொடர்பு?

அமெரிக்கத் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதற்கும், கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்துக்கும் என்ன தொடர்பு என நீங்கள் கேட்பது புரிகிறது. விஷயத்துக்கு வருகிறோம்.

இங்கிலாந்தைச் சேர்ந்த அலெக்சாண்டர் கோகென் என்பவர் ‘குளோபல் சயின்ஸ் ரிசர்ச்’ எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் கடந்த 2014-ம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனத்தின் உதவியுடன் அமெரிக்காவில் மக்களிடம் உளவியல் ரீதியான ஒருவகையான போட்டியை நடத்தினார். பணம் செலுத்தி பங்குபெறும் இப்போட்டியில் ஏறக்குறைய 5 கோடி மக்கள் பங்கேற்றனர்.

இந்தத் தகவல்கள் அனைத்தையும் அமெரிக்க அதிபர் தேர்தலின் போது, கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா நிறுவனத்துக்கு , அலெக்சாண்டர் கோகென் நிறுவனம் வழங்கி இருக்கிறது. கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனம் மிக வலிமையான, அதிநவீன மென்பொருள் உதவியுடன் மக்களின் மனநிலையை அறிந்து பிரச்சார தளத்தை டிரம்புக்கு வகுத்துக் கொடுத்துள்ளது.

3 முக்கிய வேட்பாளர்கள்

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட 3 வேட்பாளர்களுக்கு கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனம் பணியாற்றியுள்ளது. இதில் பணத்தை வாரி இரைத்த டிரம்புக்கு கூடுதல் முக்கியத்துவம்.

ஃபேஸ்புக் மூலம் கிடைத்த பயனாளிகளின் தகவல்களை அடிப்படையாக வைத்தே டிரம்ப் பிரச்சாரத்தை நாளுக்கு நாள் மாற்றி, வெற்றி பெற்றுள்ளார் என்பதுதான் இப்போது ஹாட் டாபிக்.

இதே தந்திரத்தைத்தான், அனலிட்டிகா நிறுவனம் ஐரோப்பியயூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறவேண்டுமா என்று நடத்தப்பட்ட பிரிக்ஸிட் வாக்கெடுப்பின்போதும் கையாண்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது.

புலனாய்வில் அம்பலமானது

ChrisWyliejpgசேனல்4 செய்தி நிறுவனத்தின் பத்திரிகையாளர் கிறிஸ் 100 

இங்கிலாந்தின் சேனல் 4 செய்தி நிறுவனம் நடத்திய புலனாய்வு நிகழ்ச்சியில், கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்தின் சிஇஓ அலெக்சாண்டர் நிக்ஸ் கூறியது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலில் எங்களுக்குத் தேவையான வேட்பாளர்கள் பெறுவதற்காக, எதிர்க்கட்சி வேட்பாளர்களை வீழ்த்த அழகிய பெண்களையும், கையூட்டுகளையும் பயன்படுத்துவோம். அதுவும் முடியாவிட்டால், தவறான பிரச்சாரங்களை பரப்பி எதிரணிவேட்பாளரை தந்திரமாக வீழ்த்துவோம் என்று கேமிராவில் கூறியது அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த விவகாரம் இப்போது நியூயார்க் டைம்ஸ், இங்கிலாந்து நாளேடுகள், வார ஏடுகளில் தலைப்புச் செய்தியாகவும், கவர் ஸ்டோரியாகவும் மாறி சக்கைபோடு போட்டுவருகிறது.

மறுக்கும் ஃபேஸ்புக்

mark-zuckerbergjpgபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க்100 

ஆனால், சேனல் 4 நிறுவனத்தின் குற்றச்சாட்டுகளை கேம்பிர்ட்ஜ் அனலிட்டிகா நிறுவனமும், ஃபேஸ்புக் நிறுவனமும், ஆய்வு நடத்திய அலெக்சாண்டர் கோகெனும் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.

பயனாளிகளின் விவரங்களைத் திருடவில்லை. மக்களின் தனிப்பட்ட விவரங்களைப் பாதுகாப்பதில் நாங்கள் அதிகமான கவனம் செலுத்துகிறோம். அந்தக் கொள்கையைத் தீவிரமாக அமல்படுத்துவோம். எந்த விதமான தகவல்களும் திருடப்படவில்லை என்று ஃபேஸ்புக் நிறுவனம் தொடர்ந்து மறுத்து வருகிறது. இது தொடர்பாக அனைத்து விவரங்களையும் திரட்ட தனது அதிகாரிகளுக்கு ஃபேஸ்புக் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

அடுத்து என்ன நடக்கப்போகிறது?

உலகம் முழுவதிலும் 200 கோடி பயனாளிகள் இருக்கும் ஃபேஸ்புக் நிறுவனம் தனது பயனாளிகளின் அந்தரங்கத் தகவல்களை எப்படி பாதுகாக்கப் போகிறது என்பது குறித்து வரும் 26-ம் தேதிக்குள் நேரடியாக விளக்கம் அளிக்க அமெரிக்க செனட்டர் அவை, ஃபேஸ்புக் அதிபர் மார்க் ஜூக்கர்பெர்க்குக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும், மக்களின் தகவல்கள் திருடப்பட்டது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என இங்கிலாந்து நாடாளுமன்ற எம்.பி.க்களும் வலியுறுத்தியுள்ளனர். இதற்கிடையே கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அலெக்சான்டர் நிக்ஸை சஸ்பெண்ட் செய்து அந்த நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

‘டெலிட்’செய்ய நேரம் வந்துவிட்டதா?

பயனாளிகளின் அந்தரங்கத் தகவல்கள் திருடப்படுகிறது என்ற குற்றச்சாட்டு வெளியானதும் ஃபேஸ்புக் டெலிட் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என வாட்ஸ் அப் நிறுவனர் எதிர்ப்பு தெரிவித்து வெறுப்பேற்றியுள்ளார்.

ஃபேஸ்புக் தகவல்கள் திருடப்படுகின்றன என்ற தகவல் அறிந்தவுடன் அமெரிக்கச் சந்தையில் அந்த நிறுவனத்தின் பங்குகள் படுமோசமாக சரிந்தன. ஏறக்குறைய ஒரே நாளில் ரூ.2 லட்சம்வரை குறைந்துள்ளது.

மோடி அரசு ஏன் அலறுகிறது?

pm-modi-generic-ptijpgபிரதமர் நரேந்திர மோடி : படம் பிடிஐ100 

இந்நிலையில், கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனம் இந்தியத் தேர்தலுக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அநநிறுவனத்தின் தலைவர் அலெக்சாண்டர் நிக்ஸை பலமுறை சந்தித்துப் பேசியுள்ளார் என பாஜக குற்றம் சாட்டுகிறது. உலகில் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு அதிகமான பயனாளிகள் இருக்கும் நாடுகளில் இந்தியா முக்கியமானதாகும்.

வரும் 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் உதவியுடன் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனம் மக்கள் தாக்கத்தை ஏற்படுத்தலாம், பாஜகவுக்கு எதிரான அலையை ஏற்படுத்தலாம் என்று மத்தியில் ஆளும் பாஜக அஞ்சுகிறது.

அச்சம்தான்..

அதுமட்டுமல்லாமல் இந்தியா போன்ற மிகப் பெரிய ஜனநாயக நாடுகளில் மக்கள் இயல்பான மனநிலையில் வாக்களிக்க வேண்டிய நிலையில், அவர்களுக்கே தெரியாமல், அவர்கள் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி நடைபெறும் தேர்தலும், வாக்குகளும் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் நடைமுறைக்கு இட்டுச்செல்லும் என்பது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x