

காஷ்மீரின் லே பகுதியில் சீன ராணுவம் ஊடுருவியிருப்பது உண்மைதான் என்று லே மாவட்ட ஆட்சியர் சிம்ரன்தீப் சிங் கில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
லே பகுதியில் டெம்சாக் பகுதியில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் சிற்றணை கட்டப்பட்டு வருகிறது. இதற்கு சீன ராணுவம் கடும் எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் முகாமிட்டுள்ளது. மேலும் சீன மக்களும் அங்கு குவிந்து பதாகைகளை ஏந்தி கோஷமிட்டு வருகின்றனர். இதனால் இருநாட்டு எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது என்று அவர் தெரிவித்தார். காஷ்மீர் எல்லையில் சுமார் 500 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவியிருப்பதாக அண்மையில் தகவல் வெளியானது. இதுகுறித்து நம்பகமான தகவல்கள் வெளியாகாத நிலையில் லே மாவட்ட ஆட்சியர் ஊடுருவலை உறுதி செய்துள்ளார்.