கவுரி லங்கேஷ் கொலையை ‘பிரமாதம்’ என்று கூறி பாராட்டுப் பத்திரம்: இன்னொரு கொலைக்கும் தூண்டிய சதிகாரர்கள்

கவுரி லங்கேஷ் கொலையை  ‘பிரமாதம்’ என்று கூறி பாராட்டுப் பத்திரம்: இன்னொரு கொலைக்கும் தூண்டிய சதிகாரர்கள்
Updated on
1 min read

கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இந்து யுவசேனா தலைவர் கே.டி.நவீன் குமாரைப் பாராட்டிய சதிக்கும்பல் இன்னொரு தைரியமான பகுத்தறிவுவாதியான கே.எஸ்.பகவான் என்பவரையும் கொலை செய்ய அவரைத் தூண்டியுள்ளதாக போலீஸார் தரப்பு கூறுகின்றனர்.

பிப்ரவரி 18-ம் தேதி போலீஸ் விரித்த வலையில் சிக்கிக் கைது செய்யப்பட்ட நவீன் குமார் மைசூரு பகுத்தறிவுவாதி பகவானையும் கொலை செய்ய துப்பாக்கி வாங்கும் செயலில் ஈடுபட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்த போது நவீன் குமாரிடம் துப்பாக்கித் தோட்டாக்கள் இருந்தது தெரியவந்தது.

கர்நாடகாவுக்கு வெளியே இருந்து வந்த சதிகாரர்களுக்காக கவுரி லங்கேஷ் நடவடிக்கைகளை அவரது வீட்டிற்கு அருகில் ரோந்து சுற்றி தகவல்களை அளித்தவர் நவீன் குமார். அவரது இந்த நாசகார ‘லாஜிஸ்டிக்’ சேவைகளைப் ‘பிரமாதம்’ என்று பாராட்டினார்களாம் கவுரி லங்கேஷ் கொலைச் சதிகாரர்கள், இதனையடுத்து கே.எஸ்.பகவான் கொலையையும் இவரை வைத்து முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

நவீன் குமாருக்கு உண்மை அறியும் சோதனையும் நடத்தப்படவுள்ளது.

எனவே நவீன் குமாரை போலீஸ் வலை விரித்து கைது செய்திருக்காவிட்டாலோ அல்லது அவரது கைது தாமதமாகியிருந்தாலோ கே.எஸ்.பகவானும் கொல்லப்பட்டிருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் சிலர் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து எழுத்தாளர்-பகுத்தறிவு வாதி- விமர்சகர் பகவானுக்கு காவல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நவீன் குமாருக்கு பின்னால் உள்ள சதிக்கும்பல் யார், இவர்களுக்கு ஆயுதம் எங்கிருந்து வருகிறது, இதன் வலைப்பின்னல் என்னவென்று ஒரு பயங்கரத்தை வெளிக்கொண்டு வரும் முயற்சியில் கர்நாடகா உயர்மட்ட போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் கல்புர்கி, இடதுசாரி சிந்தனையாளர் கோவிந்த் பன்சாரே ஆகியோர் கொலைக்கும் கவுரி லங்கேஷ் கொலை மற்றும் பகவான் கொலை முயற்சி ஆகியவற்றிலும் இதே சதிக்கும்பல் ஈடுபட்டிருக்கும் என்ற கண்ணோட்டமும் வலுத்துள்ளது.

இந்த வலைப்பின்னலின் ஓரிழையைத் தடம்பிடித்துச் சென்றால் பெரிய சதிவலை அம்பலமாகும் என்று போலீஸ் தரப்பினர் உறுதியாக நம்புகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in