வெளிநாடுகளில் படிக்க தலித், பழங்குடி மாணவர்களுக்கு கர்நாடக அரசு உதவி

வெளிநாடுகளில் படிக்க தலித், பழங்குடி மாணவர்களுக்கு கர்நாடக அரசு உதவி
Updated on
1 min read

தலித் மற்றும் பழங்குடியின மாண வர்கள் 24 பேருக்கு, வெளிநாட்டில் படிக்க கர்நாடக அரசு கல்வி உதவித்தொகை வழங்கியுள்ளது.

இதில் ஆஸ்திரேலியா செல்லும் சுரேஷ் கார்க்கி என்ற மாணவருக்கு அதிகபட்சமாக 43.43 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தலித், பழங்குடியின மாணவர்கள் 38 பேர் வெளிநாடுகளுக்குச் சென்று உயர்க‌ல்வி படிக்க உதவித் தொகை கேட்டு மாநில அரசிடம் விண்ணப்பித்தனர்.

அவர்களுடைய மதிப்பெண் (60 சதவீதம்), வயது (அதிகபட்சம் 35), குடும்ப ஆண்டு வருமானம் (உச்சவரம்பு ரூ.3 லட்சம்) உள்ளிட்ட காரணிகளை கொண்டு பரிசீலனை செய்ததில் 24 மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர் களுக்கு தேவையான உதவித் தொகையை வழங்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் மாணவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் மகிழ்ச்சி அடைந் துள்ளனர்.

கடன் தர அரசு தயார்

மக்களிடையே வரவேற்பை பெற்றிருக்கும் இந்த திட்டம் குறித்து கர்நாடக சமூக நலத் துறை அமைச்சர் ஹெச்.ஆஞ்சநேயா ‘தி இந்து'விடம் கூறும்போது, “ஆண்டு தோறும் தேசிய அளவில் 60 தலித் மாணவர்களுக்கும் 20 பழங்குடியின மாணவர்களுக்கும் வெளிநாட்டில் படிக்க மத்திய அரசு கல்வி உதவித் தொகை வழங்குகிறது. இந்த ஆண்டு கர்நாடக அரசு சார்பாக 24 மாணவ, மாணவிகளுக்கு இதுபோன்ற உதவித்தொகை வழங்கப்பட்டுள் ள‌து. தினக்கூலிகள், காய்கறி விற்பவர்கள், ஆட்டோஓட்டுநர்கள் போன்ற எளிய மக்களின் பிள்ளை களே இதற்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்வீடன், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு இம்மாணவர்கள் செல்கின்றனர். அங்கு எம்பிபிஎஸ், எம்பிஏ, எல்எல்எம் மற்றும் பொறியியல் ஆகிய பிரிவுகளில் சேர்ந்து படிக்க இருக்கின்றனர்.

இதில் ஆஸ்திரேலியாவுக்கு மருத்துவம் படிக்க செல்லும் சுரேஷ் கார்க்கி என்ற மாணவருக்கு அதிகபட்சம் ரூ. 43.43 லட்சம் வழங்கப்பட்டிருக்கிறது. குறைந்த பட்சமாக 8 மாணவர்களுக்கு ரூ. 12.52 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுடைய விமான செலவில் ஆரம்பித்து படித்து முடித்து வீடு திரும்பும் வரையிலான அனைத்து செலவுகளும் இதில் அடங்கும்.

இதேபோல இந்தியாவுக்குள் படிக்க விரும்பும் தலித், பழங்குடி யினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்காக அரசு ரூ.1500 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. ஆதலால் கடன் கேட்கும் அனைத்து மாணவர்களுக்கும் அவர்களுடைய வீட்டின் கதவை தட்டி கடன் கொடுக்க அரசு தயாராக இருக்கிறது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in