Published : 06 Mar 2018 06:04 PM
Last Updated : 06 Mar 2018 06:04 PM

அயோத்தி - சிரியா ஒப்பீடு: ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கு ஒவைசி கண்டனம்

 

அயோத்தி பிரச்சினையை விரைவாக தீர்க்காவிட்டால், இந்தியா சிரியாவாக மாறிவிடும் என்று வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறியுள்ளதற்கு இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவர் அசாசுதீன் ஒவைசி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ராமர் கோயில் பிரச்சினையில் சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக, இந்துக்களுக்கும், முஸ்லிம் அமைப்புகளுக்கும் இடையே சமரசப் பேச்சுவார்த்தையில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சமீபகாலமாக ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், தனியார் செய்தி சேனல் ஒன்றுக்கு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

''நாட்டில் நீண்டகாலமாக சர்ச்சைக்குரிய விஷயமாக, ராமர் கோயில் பிரச்சினை இருந்து வருகிறது. இந்தப் பிரச்சினையை நாம் அதிகமாக கவனம் செலுத்தி, விரைவாகத் தீர்க்காவிட்டால், இந்தியா வரும் காலத்தில் சிரியாவாக மாறிவிடும். சிரியா போர் சொல்வதெல்லாம், முஸ்லிம்கள் அயோத்தி விவகாரத்தில் விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும் என்பதாகும்'' எனக் கூறியிருந்தார்.

இதற்கு இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவர் அசாசுதீன் ஒவைசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

''ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தன்னை பெரியவராக நினைத்துக் கொள்கிறார். அனைவரும் அவரது பேச்சை கேட்டு நடக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார். சட்டத்தின் மீது அவருக்கு நம்பிக்கையில்லை. அவர் சொல்வதே சட்டமாக வேண்டும் என எதிர்பார்க்கிறார். அவர் நடுவராக செயல்படவில்லை. சிரியாவுடன் ஒப்பிட்டு அவர் பேசியது கண்டிக்கத்தக்கது'' என ஒவைசி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x