Published : 03 Mar 2018 04:02 PM
Last Updated : 03 Mar 2018 04:02 PM

விடை பெறுகிறார் எளிமையான முதல்வர்’ மாணிக் சர்க்கார்

திரிபுராவில் இடதுசாரி கூட்டணி அரசு 25 ஆண்டுகளுக்கு பிறகு பதவியில் இருந்து இறங்குகிறது. அங்கு 20 ஆண்டுகாலம் முதல்வர் பதவி வகித்த எளிமையான முதல்வர் மாணிக் சர்க்கார் விடை பெறுகிறார்.

நாடுமுழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட திரிபுரா மாநில சட்டப்பேரவை முடிவுகள் வெளியாகி வருகின்றன. அம்மாநிலத்தி்ல் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் வேட்பாளர் மறைவால் ஒரிடத்தில் தேர்தல் நடைபெறவில்லை. மீதமுள்ள 59 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

பிற்பகல் நிலவரப்படி பாஜக 35 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதன் கூட்டணிக் கட்சியான திரிபுரா மக்கள் முன்னணி 8 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணி 16 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.

இதன் மூலம் அம்மாநிலத்தில் 1993ம் ஆண்டு முதல் பதவியில் இருந்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணி அரசு பதவி விலகுகிறது. 20 ஆண்டுகாலம் முதல்வராக பதவி வகித்து வரும் மாணிக் சர்கார், அங்கு நீண்டகாலம் முதல்வர் பதவி வகித்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

திரிபுரா மாநிலம் கிருஷ்ணபூரில் 1949ல் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் மாணிக் சர்க்கார். இவரது தந்தை அமுல்யா சர்க்கார் தையல்காரர். தாய் அஞ்சலி சர்க்கார் அரசு பணியாளர். தொடக்க காலம் முதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாக பணியாற்றிய மாணிக் சர்க்கார் 1998ம் ஆண்டு அம்மாநில முதல்வராக பதவியேற்றார். 20 ஆண்டுகாலம் தொடர்ந்து முதல்வராக இருந்த அவர் மிகவும் எளிமையானவர்.

திரிபுரா மாநிலத்தின் எந்த பகுதி மக்களும் அவரை தொடர்பு கொள்ள முடியும். நேர்மையான நிர்வாகம் மற்றும் கடைக்கோடி மக்களுக்கும் அரசு பணிகள் சென்றடைவதை உறுதி செய்தார். நாட்டிலேயே மிக குறைவான சொத்துக்கொண்ட ஏழை முதல்வர் ஆவார். சொந்த வீடு, நிலம் இல்லாத முதல்வராக இருந்து வந்தார். இந்தியாவில் தற்போதுள்ள முதல்வர்களின் சொத்துக்கள் குறித்த விவரம் வெளியானபோது, மிகவும் குறைவான சொத்து கொண்ட எளிமையான முதல்வர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

திரிபுரா தேர்தலில் இடதுசாரி கூட்டணி தோல்வி முகத்தில் இருப்பதால் அவர் பதவி விலகும் சூழல் தற்போது உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x