Last Updated : 22 Mar, 2018 07:43 PM

 

Published : 22 Mar 2018 07:43 PM
Last Updated : 22 Mar 2018 07:43 PM

பண மதிப்பிழப்பு நடவடிக்கை வெற்றி: அருண் ஜேட்லி பெருமிதம்

 

நாட்டில் கறுப்புப் பணத்தைக் கண்டுபிடிப்பதிலும், ஊழலைக் கட்டுப்படுத்துவதிலும் பண மதிப்பிழப்பு நடவடிக்கை வெற்றிகரமாகச் செயல்பட்டுள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பெருமிதத்தோடு தெரிவித்துள்ளார்.

நாட்டில் கறுப்புப் பணம், கள்ளநோட்டு, ஊழல் ஆகியவற்றை ஒழிக்கும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016-ம் ஆண்டு, நவம்பர் 8-ம் தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கையைக் கொண்டு வந்தார்.

இதன் மூலம் நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.15.50 லட்சம் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டன. இந்த நடவடிக்கைக்குப் பின் மக்கள் பல்வேறு சிரமங்களை அடைந்தனர், சேமிப்புப் பணத்தை எடுக்க முடியாமல், பணத்தை மாற்றமுடியாமலும் வேதனை அடைந்தனர்.

இந்நிலையில், மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு நிதி அமைச்சர் அருண் ஜேட்லி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''கடந்த 2016-ம் ஆண்டு, நவம்பர் 8-ம் தேதி நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை கறுப்புப் பணத்தையும், ஊழலையும் ஒழிப்பதற்காகக் கொண்டு வரப்பட்டது. ரூ.500, ரூ.1000 நோட்டுகள் மட்டும் ரூ.15.44 லட்சம் கோடி புழக்கத்தில் இருந்தன. ஒட்டுமொத்தமாக ரூ.18 லட்சம் கோடி புழக்கத்தில் இருந்தது.

இந்த நடவடிக்கையால், உயர்மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை வீட்டில் கறுப்புப் பணமாகப் பதுக்குவதும், ஊழல் செய்வதும் தடுக்கப்பட்டது. பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் நாட்டில் ஊழலும், கறுப்புப் பணம் புழங்குவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கள்ள நோட்டுகளைத் தடுத்தல், தீவிரவாதத்துக்குப் பணம் செல்லுதைத் தடுத்தல், பொருளாதாரத்தைச் சீர்படுத்துதல், டிஜிட்டல் பரிமாற்றத்தை ஊக்கப்படுத்துதல் ஆகியவற்றைச் செயல்படுத்துவதிலும் பண மதிப்பிழப்பு சிறப்பாகச் செயல்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி மத்திய வருவாய் துறை 'ஆப்ரேஷன் கிளீன் மணி' என்ற பெயரில் நடவடிக்கையைத் தொடங்கியது. இதன் மூலம் 17.92 லட்சம் நபர்கள் செய்த பணப் பரிமாற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இவர்கள் யாரும் வருமானவரி செலுத்தவில்லை.

இதில் 11 லட்சம் பேர் ஆன்லைன் மூலம் பதில் அளித்தனர். தீவிர கண்காணிப்பு மற்றும் பின்தொடர்தல் மூலம் பலமுக்கிய நபர்கள் பிடிபட்டனர். இவர்களின் வருமானவரித் தாக்கல், பணம் டெபாசிட் செய்தது ஆகியவை ஒப்பீடு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.''

இவ்வாறு அருண் ஜேட்லி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x