Published : 17 Sep 2014 12:49 PM
Last Updated : 17 Sep 2014 12:49 PM

இடைத்தேர்தல் முடிவுகளை பாடமாகக் கருதுங்கள்: பாஜகவுக்கு சிவசேனை அறிவுரை

இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பாஜகவுக்கு நெருக்கடி கொடுக்கத் துவங்கியுள்ளது சிவசேனை.

இடைத்தேர்தல் முடிவில் இருந்து பாஜக பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என சிவசேனை கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 13-ம் தேதி நடந்த இடைத்தேர்தல் முடிவுகள் செவ்வாய்கிழமை வெளியாகின. இடைத்தேர்தல் நடைபெற்ற சட்டப்பேரவை தொகுதிகளில் பாஜக வசம் 24 தொகுதிகள் இருந்தன. இதில் 13 தொகுதிகளை பாஜக இழந்துள்ளது. மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் அமோக வெற்றி பெற்ற பாஜக, இந்த முறை பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

இந்நிலையில், அடுத்து பாஜக சந்திக்கவிருக்கும் பரீட்சை, மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தல். மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் தங்களுக்கு சரிசமமாக தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்ற சிவசேனையின் கோரிக்கைக்கு வலு சேர்த்துள்ளது இடைத்தேர்தல் முடிவு.

சிவசேனை கட்சியின் எம்.எல்.சி. ராம்தாஸ் கடம் 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:

"இடைத்தேர்தல் முடிவுகளில் இருந்து பாஜக பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். களத்தில் இறங்கி பணி புரிய வேண்டும். யாருடைய அலை வீசுகிறது என்பதை புரிந்து கொண்டு தலைவர்கள் பணியாற்ற வேண்டும். பாஜகவுக்கு ஆதரவாக அலை இருக்கிறது என்றால் அதில் சிவ சேனையின் பங்கும் இருக்கிறது என்பதை அவர்கள் உணர வேண்டும்" என்றார்.

இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே, கட்சியின் மூத்த தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். செப்டம்பர் 19 (நாளை மறுநாள்) ஆலோசனைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.

2009-ல் மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 119 இடங்களிலும், சிவ சேனை 169 இடங்களிலும் போட்டியிட்டன. இதே கணக்கில் இப்போது மீண்டும் தொகுதிப் பங்கீடு செய்து கொள்ள வேண்டும் என்பதே சிவ சேனை முன்வைக்கும் கோரிக்கை.

ஆனால், மக்களவை தேர்தல் அமோக வெற்றியை காரணம்காட்டி பாஜக கூடுதல் தொகுதிகளை கேட்டு வந்தது.

இந்நிலையில் இடைத்தேர்தல் முடிவை சுட்டிக் காட்டியுள்ள சிவ சேனை மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில்: "இந்த முடிவுகள் மாநிலக் கட்சிகளின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளன. எனவே, 1990-ல் இருந்தது போல் சிவ சேனைக்கு 183 இடங்கள், பாஜகவுக்கு 105 இடங்கள் என்ற தொகுதிப் பங்கீட்டை இப்போது பின்பற்ற வேண்டும்" என்றார்.

முன்னதாக, மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில், பாஜக - சிவ சேனை இரண்டு கட்சிகளும் சமமாக 135 தொகுதிகளை பங்கிட்டுக் கொள்ளலாம், எஞ்சியுள்ள 18 தொகுதிகளை பிற கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கலாம் என்ற பாஜக-வின் யோசனையை உத்தவ் தாக்கரே நிராகரித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், தொகுதிப் பங்கீட்டு விவகாரம் தொடர்பாக புதன்கிழமையன்று மும்பை வரும் அமித் ஷா இறுதி முடிவு எடுப்பார் எனக் கூறப்படுகிறது.

இடைத்தேர்தல் முடிவுகளை முன்வைத்து சிவசேனை ஒரு புறம் நெருக்கடியை அதிகரித்து வருகிறது, மற்றொரு புறம் பாஜகவோ, மக்கள் உள்ளூர் பிரச்சினைகளைக் கொண்டு வாக்களித்ததால், இடைத்தேர்தல்களில் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் பாஜக பலமாகவே இருக்கிறது என்று கருத்து தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x