

புதிய ஆளுநர் நியமனம் குறித்து மாநில அரசுடன் இதுவரை மத்திய அரசு கலந்தாலோசிக்கவில்லை என கேரள முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவத்தை கேரள ஆளுநராக நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அரசியல், நீதித் துறை வட்டாரங்களில் பரபரப்பான விவாதம் நடை பெற்று வருகிறது. இதுகுறித்து கேரள முதல்வர் உம்மன் சாண்டி கோழிக்கோடில் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: மத்திய அரசு, மாநில ஆளுநரை நியமிக்கும்போது சம்பந்தப்பட்ட மாநில அரசிடம் ஆலோசனை நடத்துவது வழக்கமாக உள்ளது. இந்த விவகாரத்தில் இதுவரை மத்திய அரசு, மாநில அரசை கலந்தா லோசிக்கவில்லை. ஆனாலும் வழக்கமான இந்த நடைமுறை இந்த முறையும் பின்பற்றப்படும் என எதிர்பார்க் கிறேன் என தெரிவித்தார்.
இதுகுறித்து கேரள காங்கிரஸ் தலைவர் வி.எம். சுதீரன் கூறும்போது,“இதற்கு முன்பு ஓய்வுபெற்ற நீதிபதிகள் மாநில ஆளுநர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர். ஆனால், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஒருவரை ஆளுநராக நியமித்தால் பல்வேறு கேள்விகள் எழும். இத்தகைய கேள்விகளுக்கு சட்ட நிபுணர்கள்தான் பதில் அளிக்க வேண்டும்” என்றார்.