Published : 08 Mar 2018 11:44 AM
Last Updated : 08 Mar 2018 11:44 AM

மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் குடியேறிய மாணிக் சர்க்கார்: இப்படியும் ஓர் எளிய மனிதர்

திரிபுராவில் முதல்வர் பதவியில் இருந்து விலகிய மாணிக் சர்க்கார், சொந்த வீடு இல்லாததால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் குடியேறினார்.

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. திரிபுராவில் 25 ஆண்டுகளாக கோலோச்சி வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி படுதோல்வி அடைந்தது. திரிபுராவில் மொத்தம் உள்ள 59 தொகுதிகளில் பாஜக கூட்டணி 43 இடங்களில் வெற்றி பெற்றது.

இதையடுத்து முதல்வர் மாணிக் சர்க்கார் தனது பதவியை ராஜினாமா செய்தார். அங்கு புதிய அரசு பதவியேற்கும் வரை பொறுப்பு முதல்வராக இருந்து வருகிறார். எளிமையானவர், ஊழல் அற்றவர் என புகழப்படும் மாணிக் சர்க்கார் முதல்வர் பதவியை ராஜினமா செய்ததைத் தொடர்ந்து உடனடியாக அரசு வீட்டை காலி செய்தார்.

நாட்டிலேயே சொந்த வீடு இல்லாத, மிகவும் எளிமையான முதல்வராக இருந்து வந்தார் மாணிக் சர்க்கார். அவருக்கு குடியிருக்க வீடு இல்லாததால் திரிபுரா தலைநகர் அகர்தலாவில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தனது மனைவியுடன் குடியேறியுள்ளார். கட்சி அலுவலகத்தின் மேல் தளத்தில் உள்ள அறையில் அவரும் அவரது மனைவி பாஞ்சாலி சர்க்காரும் தங்கியுள்ளனர். வசதிகள் இல்லாத சாதாரண அறையில் இருவரும் தங்கி வழக்கம்போல் தங்கள் பணிகளை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘முதல்வர் பதவியை விட்டு விலகி விட்டதால் வீட்டை காலி செய்வது தான் சரியான நடைமுறை. எனவே உடனடியாக வீட்டை காலி செய்து விட்டேன். எனக்கு சொந்த வீடு இல்லை. அதேசமயம் அகர்தலாவில் உள்ள உறவினர்கள் வீடுகளில் தங்கலாம். உறவினர்களும் எங்களுக்கு அழைப்பு விடுத்தனர். ஆனால் நான் கட்சி அலுவலகத்திலேயே தங்க முடிவெடுத்தேன்’’ எனக்கூறினார்.

மாணிக் சர்க்காரின் மனைவி பஞ்சாலி மத்திய அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். அகர்தலாவில் அவருக்கு சொந்தமான இடத்தில் வீடுகட்ட சில மாதங்களுக்கு முன் நடவடிக்கை எடுத்தார். ஆனால் வீடு கட்டுமான பணிகள் இன்னமும் நிறைவு பெறவில்லை.

இந்த தகவல் வெளியானதும் திரிபுராவின் புதிய முதல்வராக பதவியேற்கவுள்ள பாஜகவின் பிப்லப் குமார் தேப்,

"மாணிக் சர்க்கார் அனைத்து கட்சியினரும் மதிக்கும் தலைவர். எங்களுக்கு அவர் முன்னோடி. திரிபுராவில் மாற்றங்களை ஏற்படுத்த அவரது ஒத்துழைப்பு அவசியம். அவரது வழிகாட்டுதலுடன் திரிபுராவில் வளர்ச்சிப் பணிகள் நடைபெறும். அவர் முதல்வர் பதவி விலகியுள்ள போதிலும் எதிர்கட்சி தலைவர் அவர். எதிர்க்கட்சி தலைவர் பதவி என்பது அமைச்சருக்கு நிகரானது. எனவே அவருக்கு உடனடியாக அரசு வீடு ஒதுக்கீடு செய்யப்படும். அதுபோலவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் அவர்களுக்கான விடுதியில் அறைகள் ஒதுக்கீடு செய்யப்டும்’’ எனக்கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x