Published : 08 Mar 2018 02:53 PM
Last Updated : 08 Mar 2018 02:53 PM

"டெல்லிக்கு நடையாய் நடந்தேன்; மோடி வேதனையைத்தான் வழங்கினார்": சந்திரபாபு நாயுடு குமுறல்

ஆந்திராவுக்கு சிறப்பு நிதி கோரி டெல்லிக்கு 29 முறை சென்றும், மத்திய அரசும் பிரதமர் மோடியும் எங்களுக்கு எதையும் செய்யவில்லை என அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு வேதனையுடன் கூறியுள்ளார்.

ஆந்திராவுக்கு சிறப்பு நிதி வழங்குவதாக உறுதியளித்த மத்திய அரசு அந்த கோரிக்கையை நிறைவேற்றவில்லை. இதனால், பட்ஜெட் கூட்டத் தொடரில் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆந்திர மாநிலத்துக்கு அளித்துள்ள 19 வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும், இல்லாவிட்டால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறப் போவதாக தெலுங்கு தேசம் அறிவித்தது. ஆனால் கோரிக்கையை ஏற்கும் சூழல் இல்லை என நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துவிட்டார். இதனால் மத்திய அரசில் இருந்து தெலுங்குதேசம் விலகுகிறது.

இந்நிலையில் மத்திய அரசில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டது குறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று விரிவான விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

‘‘ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு தெலுங்கானா உருவாக்கப்பட்ட நாட்கள் என் நினைவுக்கு வருகின்றன. 2014ம் ஆண்டு தேர்தலின்போது, தெலுங்கானா என்ற குழந்தை உருவாக்கப்பட்டு விட்டது. ஆனால் ஆந்திரா என்ற தாயை காஙகிரஸ் கொன்று விட்டது என மோடி அப்போது கூறினார். தேர்தலுக்குப் பிறகு ஆந்திர மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார்.

இதன் பிறகு ஆந்திராவின் நலனுக்காக 19 கோரிக்கைகளை முன் வைத்தோம். மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளித்து, சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரினோம். இவையெல்லாம் விரைவாக பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்த்தேன். ஆனால் எதுவும் செய்யவில்லை.

புதிய தலைநகருக்கு நிதி, விசாகபட்டினத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி ரயில்வே மண்டலம் என எந்த கோரிக்கைக்கும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. டெல்லிக்கு 19 முறை சென்று வந்துவிட்டேன். நடையாய் நடந்தும் எங்களை மத்திய அரசும், பிரதமர் மோடியும் கண்டுகொள்ளவில்லை. பிரதமர் மோடி எங்களுக்கு உதவி செய்யவில்லை. மாறாக வேதனையைத்தான் வழங்கினார்.

மாநில பிரிவு, மின்சார பற்றாக்குறை, நிதி இல்லாமல் தவிப்பு, தலைநகருக்கான இடப் பிரச்சினை என ஆந்திரா தொடர்ந்து சிக்கல்களை சந்தித்து வந்தது. ஆனால் மத்திய அரசு எதையும் கண்டுகொள்ளவில்லை.

நாட்டின் மூத்த அரசியல்வாதி நான். மாநிலத்தின் வளர்ச்சிக்காக நான் கடுமையாக உழைக்கிறேன். மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து நன்மைகளை பெற வேண்டும் என முயன்றேன். ஆனால் மத்திய அரசின் செயல்பாடுகள் அதற்கு மாறாக இருந்தது. மத்திய அரசு எனக்கு வேதனையைதான் தந்தது. மாநிலத்தின் நலனே முக்கியம். அதை நோக்கிய எங்கள் பயணம் தொடரும்’’ எனக்கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x