Last Updated : 24 Mar, 2018 10:10 AM

 

Published : 24 Mar 2018 10:10 AM
Last Updated : 24 Mar 2018 10:10 AM

பல்கலை.களில் ‘தேசவிரோதி’ என முத்திரைக் குத்தி வாயை அடைக்கக் கூடாது: ரகுராம் ராஜன்

நாட்டின் பல்கலைக் கழகங்கள் ஆரோக்கியமான விவாதங்களுக்கான பாதுகாப்பான இடம் என்று முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.

பல்கலைக் கழகங்களில் எந்த ஒரு சிந்தனைத் தடத்தையும் நாம் ஊக்குவிக்க வேண்டும் என்று கூறிய ரகுராம் ராஜன் தனது சகா ஒருவர் தன் கருத்துக்கு ஒத்துவராவிட்டாலும் டொனால்ட் ட்ரம்பின் தலைமை உத்தி வகுப்பாளர் ஸ்டீவ் பேனனை பேச அழைத்ததைச் சகிப்புத்தன்மைக்கான உதாரணமாகச் சுட்டிக் காட்டினார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் ரகுராம் ராஜன் கூறியதாவது:

கருத்துக்களின் விவாதக்களமாக பல்கலைக் கழகங்களை நாம் மதிக்கப் பழக வேண்டும். எதிர்த்தரப்பினரை ‘நீங்கள் இதைப் பேச உரிமை இல்லை’ நீங்கள் தேச விரோதி’ என்றெல்லாம் முத்திரைக் குத்தி வாயை அடைக்கக் கூடாது.

ஒரு சமூகமாக நாம் எங்கு விவாதங்களும் கருத்துகளும் உருவாகின்றதோ அந்த இடத்தைப் பாதுகாப்பான இடமாக மாற்ற வேண்டும். இங்கு மக்கள் சுதந்திரத்தைத்தான் பயன்படுத்துகின்றனரே தவிர தனக்கு உரிமம் வழங்கப்பட்டுவிட்டதாக நினைத்துப் பேசுவதில்லை. இத்தகைய விவாதங்கள்தான் சமுதாயத்தை முன்னோக்கி நகர்த்தும்.

எந்த பல்கலைக்கழகமும் சர்ச்சைகளுக்கு உரிய இடமாகத் திகழலாம், ஆனால் அந்த சர்ச்சையை நாம் பாதுகாக்க வேண்டும். விவாதங்கள், உரையாடல்கள் நடக்க வேண்டும். நமக்குப் பிடிக்காதக் கருத்துகள் அங்கு எழக்கூடும். ஆனால் அவற்றை அங்கேயே சுட்டு வீழ்த்திவிடக் கூடாது, ஏனெனில் நமக்குப் பிடிக்காத கருத்துகள் நாளடைவில் நல்லதாக மாறி அவரி மைய நீரோட்டமாகவே மாறிவிடலாம்.

உதாரணமாக பெண்கள் உரிமை என்பது 19-ம் நூற்றாண்டில் விவாதக்களமாக மாறியது, அப்போது சர்ச்சையாக மாறியது இப்போது அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக உள்ளது, ஆகவே எந்தக் கருத்து எப்போது எப்படிப்பட்டதாக மாறும் என்பதை நாம் கட்டுப்படுத்த முயற்சி செய்யக்கூடாது.

இவ்வாறு கூறினார் ரகுராம் ராஜன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x