Last Updated : 31 May, 2019 01:29 PM

 

Published : 31 May 2019 01:29 PM
Last Updated : 31 May 2019 01:29 PM

மோடியின் அமைச்சரவையில் மூன்றில் ஒருபகுதி புதியவர்கள்:3 பேர் முனைவர் பட்டம் பெற்றவர்கள்

புதிதாக அமைக்கப்பட்டுள்ள பிரதமர் மோடியின் அமைச்சரவையில் மூன்றில் ஒருபகுதி புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் 3 பேர் முனைவர் பட்டம் பெற்றவர்கள்

மக்களவைத் தேர்தலில் 303 இடங்களைப் பெற்று அமோக வெற்றி பெற்ற பாஜக தலைமையிலான அரசு 2-வது முறையாக பதவி ஏற்றுள்ளது. குடியரசு தலைவர் மாளிகையில் மோடி நேற்று 2-வது முறையாகப் பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் 57 அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டார்கள்.

கடந்த முறையிலான அரசில் அமைச்சர் பதவி ஏற்றவர்களில் 40சதவீதம் பேருக்கு மீண்டும் அமைச்சர்  பதவி வழங்கப்படவில்லை. அதேசமயம், மூன்றில் ஒரு பங்கு புதியவர்களாக அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். மக்களவையில் பாஜக எம்.பி.க்கள் எண்ணிக்கையின்படி 80 அமைச்சர்கள் வரையில் இடம் பெறலாம் எனும் சூழலில் தற்போது 57 அமைச்சர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளார்கள்.

இதில் உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் ரமேஷ் போக்ரியால், ராஜ்கண்ட் முன்னாள் முதல்வர் அர்ஜுன் முன்டா மத்திய அமைச்சர்களாக முதல்முறையாக பதவி ஏற்றார்கள். கேபினெட் அமைச்சர்களாக பதவி ஏற்றவர்களில் 6 பேரும், இணைஅமைச்சர்களாகப் பதவி ஏற்றவர்களில் 13 பேரும் முதல்முறையாக வாய்ப்பு பெறுகிறார்கள்.

இதில் பாஜக தலைவர் அமித் ஷா, ஜெய்சங்கர் ஆகியோரும் முதல் முறையாக அமைச்சர் வாய்ப்பு பெற்றுள்ளார்கள். இதில் அமித் ஷா மக்களவை எம்.பி,யாக வந்துள்ளார். ஜெய்சங்கர் மாநிலங்களவை எம்.பி.மூலம் அமைச்சராவார் எனத் தெரிகிறது.

சிவசேனா கட்சியைச் சேர்ந்த அரவிந்த் சாவந்த் முதல் முறையாக மத்திய அமைச்சராகியுள்ளார். அனுராக் தாக்கூர், பிஹார் பாஜக தலைவர் நித்யானந்த் ராய், முன்னாள் கேரள பாஜக தலைவர் வி. முரளிதரன் ஆகியோர் முதல் முறையாக அமைச்சராக உள்ளனர்.

இவர்கள் தவிர, கர்நாடகவின் சுரேஷ் அங்காடி, ஹரியானைச் சேர்ந்த ரத்தன் லால் கட்டாரியா, சட்டீஸ்கரைச் சேர்ந்த ரேனுகா சிங் சாருதா, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சோம் பிரகாஷ்,  அசாம் மாநிலத்தின் ரமேஷ்வர் தெலி, ஒடிசாவின் பிரதாப் சந்திர சாரங்கி, ராஜஸ்தானின் கைலாஷ் சவுத்ரி, மேற்கு வங்கத்தின் தேபஸ்ரீ சவுத்ரி ஆகியோர் முதல்முறையாக அமைச்சராகியுள்ளனர்.

முனைவர் பட்டம்

அமைச்சர் பதவி பெற்றவர்களில் 3 பேர் முனைவர் பட்டம் பெற்றவர்கள். முன்னாள் வெளியுறவு செயலாளர் எஸ். ஜெய்சங்கர், உ.பி. பாஜக மாநிலத் தலைவர் மகேந்திர நாத் பாண்டே, உத்தரகாண்ட் மாநில முன்னாள் முதல்வர் ரமேஷ் போக்ரியல் நிஷாங்க் ஆகியோர் முனைவர் பட்டம் பெற்றவர்கள்.

இதில் ஜெய்சங்கர் டெல்லியில் உள்ள ஸ்டீபன்ஸ் கல்லூரியில் முதுகலை அரசியல் அறிவியல், ஜேஎன்யு பல்கலையில், சர்வதேச உறவுகள் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர்.

உ.பி. மாநிலத் தலைவர் பாண்டே, பானாராஸ் இந்து பல்கலையில் இந்தியில் முனைவர் பட்டம் பெற்றவர், இதழியல் துறையில் முதுகலைபட்டம் பெற்றுள்ளார் பாண்டே.

ஹரித்துவார் தொகுதியில் வென்ற நிஷாங்க் உத்தரகாண்டில் உள்ள கார்வால் பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x