Published : 06 May 2019 07:04 PM
Last Updated : 06 May 2019 07:04 PM

கர்நாடகாவில் ரயில் தாமதத்தால் நீட் தேர்வை எழுத முடியாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு: பிரகாஷ் ஜவடேகர் தகவல்

கர்நாடகாவில் 7 மணி நேர ரயில் தாமதத்தால் தவித்து நீட் தேர்வை எழுத முடியாமல் போன மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

மருத்துவப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நாடு முழுவதும் நேற்று நடந்தது. இதில் கர்நாடக மாநிலம், ஹம்பி நகரில் இருந்து பெங்களூருவுக்கு ஏராளமான மாணவர்கள் நீட் தேர்வு எழுந்த ஹம்பி எஸ்பிரஸ் ரயிலில் சனிக்கிழமை புறப்பட்டனர். இந்த ஹம்பி எக்ஸ்பிரஸ் மைசூரு வழியாக பெங்களூரு வந்தடையும்.

ஆனால், ஹம்பி எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த பெரும்பாலான மாணவர்களுக்கு பெங்களூரு புறநகரில் நேற்று நண்பகல் 2 மணிக்குத் தேர்வு எழுத இருந்தனர். ஆனால், ரயில் 7 மணிநேரம் தாமதமாக யஷ்வந்த்பூர் சந்திப்பை நண்பகல் மதியம் 2.36 மணிக்கு வந்தடைந்தது.

மாணவர்கள் அடித்துப் பிடித்து  தங்கள் பெற்றோர்களுடன் தேர்வு மையத்துக்குச் சென்றபோது அங்கு தேர்வு தொடங்கி வெகுநேரம் ஆகியிருந்தது. நீட் தேர்வு முறை விதிமுறைகள்படி, நண்பகல் 1.30 மணிக்கு மேல் எந்த மாணவர்களையும் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்க முடியாது என்று கூறி மாணவர்களை அனுமதிக்க மறுத்துவிட்டனர்.

இதனால் தேர்வு எழுத முடியாமல் தவித்த மாணவர்கள், தங்களின் ஒரு ஆண்டு படிப்பு வீணாகிவிட்டதே என்று கண்ணீர் விட்டனர்.  தேர்வு மைய அதிகாரிகளிடம் மாணவர்களும், பெற்றோர்களும் மன்றாடியும் அவர்களை அனுமதிக்க மறுத்துவிட்டனர்.

நூற்றுக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வு எழுத முடியாமல், சாலையின் ஓரத்தில் பெற்றோர்களுடன் கண்ணீருடன் நிற்பதைப் பார்த்த மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இந்த மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

ஃபானி புயல் போன்ற இயற்கை பேரிடரால் ஒடிசா மாநிலத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால், எதிர்பாராதவிதமாக ரயில் தாமதம் போன்ற மனிதத் தவறுகளுக்கு, மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை இழந்து தண்டனை அனுபவிக்கிறார்கள்.

ஒடிசாவில் நீட் தேர்வு நடத்தும்போது, ரயில் தாமதத்தால் நீட் தேர்வை எழுதமுடியாமல் போன நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இக்கோரிக்கை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரின் கவனத்திற்கும் சென்ற நிலையில், ''ரயில் தாமதத்தால் பாதிக்கப்பட்டு நீட் தேர்வு எழுத முடியாமல் போன மாணவர்களுக்கு மீண்டும் தேர்வெழுத வாய்ப்பளிக்கப்படும்'' என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x