ஜம்மு காஷ்மீர்  லே மாவட்ட  பத்திரிகையாளர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதா பாஜக? - புகாரில் தகுதியிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தகவல்

ஜம்மு காஷ்மீர்  லே மாவட்ட  பத்திரிகையாளர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதா பாஜக? - புகாரில் தகுதியிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தகவல்
Updated on
1 min read

மே மாதம் 6ம் தேதி நடைபெற்ற லோக்சபா தேர்தலில் வாக்குகளை தங்கள் பக்கம் சாய்க்க பாஜக தலைவர்கள் ரவீந்தர் ரெய்னா, எம்.எல்.சி. விக்ரம் ரந்தவா ஆகியோர் லே பகுதி பத்திரிகையாளர்களுக்கு உறையில் பணத்தை வைத்து லஞ்சம் கொடுக்க முயன்றதாக பத்திரிகையாளர்கள் புகார் அளித்தனர்.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக நிறுவப்பட்ட விசாரணையில் இந்தப் புகாருக்கான முதற்கட்ட தகுதி நிலை இருப்பதாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக லே மாவட்ட தலைமைத் தேர்தல் அதிகாரியும் உதவி ஆணையருமான ஆவ்னி லவாசா கூறும்போது, “நாங்கள் இது தொடர்பாக மாவட்ட நீதிமன்றத்தை அணுகி எஃப்.ஐ.ஆர். பதிவு செய்வதற்கான வழிகாட்டுதல்கள் என்னென்ன என்பதைக் கேட்டுள்ளோம்” என்றார்.

இது தொடர்பாக எழுந்துள்ள 3 புகார்களையும் ஒன்று சேர்த்து கோர்ட் விசாரிக்கும் என்று லவாசா கூறுகிறார்.

கவரில் வைத்துப் பணம் கொடுத்ததாக பாஜக தலைவர்கள் மீது பல பத்திரிகையாளர்கள் புகார் அளித்துள்ளனர். அவர்கள் கவரைக் கொடுத்தது கேமராவிலும் பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

லடாக் பகுதி பத்திரிகையாளர்கள் சங்கம் இந்தச் செயலை வன்மையாகக் கண்டித்து தேர்தல் நடத்தை விதிமுறைகளின் வெளிப்படையான மீறல் இது, வாக்காளர்களைத் திசைத்திருப்புவதற்காக பத்திரிகையாளர்களை விலை பேசுவதா என்று இவர்கள் தங்கள் புகார்களில் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பாஜக மாநில பொதுச்செயலாளர் அசோக் கவுல் கூறும்போது, “எங்களுக்கு அந்த மாதிரி மரபு இல்லை. கட்சி இதனை கூர்ந்து நோக்கும்” என்று கூறியிருக்கிறார்.

மேலும் பாஜகவினர் இது தொடர்பாகக் கூறும்போது, பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகைக்கும் அவர் தேர்தல் உரைக்கும் வருமாறு உறையில் செய்தி அனுப்பியிருந்தோம் இதனை பணம் கொடுத்ததாகத் திரிக்கின்றனர் என்றும் அவர்கள் மீது அவதூறு வழக்குத் தொடர்வோம் என்றும் கூறியுள்ளனர்.

இந்த வீடியோ வெளியனாவுடன் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முப்தி, உமர் அப்துல்லா ஆகியோர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜகவை சாடியுள்ளனர்.

ரின்ச்சென் ஆங்மோ என்ற ஒரு பத்திரிகையாளர் தனியார் ஆங்கில தொலைக்காட்சிக்கு கூறும்போது,  4 பத்திரிகையாளர்களுக்கு பாஜக மாநிலத் தலைவர் முன்னிலையில் கவர் வழங்கப்பட்டது. ‘நான் அதில் என்ன இருக்கிறது என்றேன். அவர்கள் திறக்க வேண்டாம் என்றனர். ஆனால் அதன் பிறகு திறந்துப் பார்த்தால் ரூ.500 நோட்டுகள் இருந்தன. நான் திருப்பி அளித்தேன், அவர்கள் திருப்பி வாங்க மறுத்துவிட்டனர், ஆனால் நான் அதனை மேஜை மேல் வைத்து விட்டு வந்துவிட்டென்’ என்று கூறியுள்ளார். சிசிடிவி வீடியோவில் ஒரு பெண் நிருபர் மேஜையில் கவரை விட்டுச் சென்றதும் பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in