

நீங்கள் அறைந்தால் கூட ஆசிர்வாதமாகத்தான் இருக்கும். அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வேன் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கு பிரதமர் மோடி பதிலளித்துள்ளார்.
மேற்கு வங்கத்தின் பன்குராவில் இன்று நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் மோடி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ''மேற்கு வங்கத்தைப் புயல் தாக்கியபோது தீதியை நான் மீண்டும் மீண்டும் தொலைபேசியில் அழைத்தேன். ஆனால் அவரின் கர்வத்தால் அவர் பிரதமருடன் பேசுவது சரியாக இருக்கும் என்று நினைக்கவில்லை. மத்திய அரசும் இங்குள்ள அதிகாரிகளுடன் பேசி, மாநிலத்துக்கு உதவ விரும்பியது. ஆனால் சந்திப்பை நடத்தக்கூட மம்தா மறுத்துவிட்டார்.
மேற்கு வங்க மகள்களையும் கலாச்சாரம் மிகுந்த வங்காளிகளையும் தொந்தரவு செய்பவர்கள் அடையாளம் காணப்பட்டு அப்புறப்படுத்தப்படுவார்கள் என்று உறுதி அளிக்கிறேன்.
தீதி என்னை அறைய வேண்டும் என்று விரும்பியதாகக் கேள்விப்பட்டேன். தீதி.. ஓ தீதி.. நான் உங்களை தீதி என்று அழைக்கிறேன்.. உங்களை மதிக்கிறேன்.. நீங்கள் அறைவதுகூட எனக்கு ஆசீர்வாதமாக இருக்கும். அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வேன்.
ஆனால் ஒரேயொரு கேள்வி கேட்க விரும்புகிறேன். சிட் ஃபண்டுகளின் மூலம் ஏழைகளின் வயிற்றில் அடித்த உங்களின் சகாக்களின் கன்னத்தில் அறைய உங்களுக்கு தைரியம் இருக்கிறதா, அதற்கு நீங்கள் அச்சப்படமாட்டீர்களே?
மேற்கு வங்கத்தில் குடியரசாக இருந்து குண்டர்கள் அரசாக மாறியவர்களுக்கு குறைந்த நாட்களே எஞ்சியிருக்கின்றன'' என்றார் மோடி.
முன்னதாக செவ்வாய்க்கிழமை அன்று பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, ''ஒவ்வொரு முறையும் மோடி திரிணாமூல் கட்சியை கொள்ளைக்கூட்டம் என்று விமர்சிக்கிறார். அப்போதெல்லாம் அவருக்கு ஜனநாயகரீதியான அறை கொடுக்கவேண்டும் போலிருக்கும்'' என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.