

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 48 சதவீதம் பேர் மட்டுமே பட்டப்படிப்பு அதற்கு மேல் படித்துள்ளனர் என்று தேதிசய தேர்தல் கண்காணிப்பு அமைப்பான ஜனநாயகச் சீர்த்திருத்தங்களுக்கான அமைப்பு(ஏடிஆர்) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஏடிஆர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 8 ஆயிரத்து 49 வேட்பாளர்களில் 7 ஆயிரத்து 928 வேட்பாளர்களின் வேட்புமனுக்களை ஆய்வு செய்தோம். இதில் 121 வேட்பாளர்கள் தாக்கல் வேட்பு மனுவில் தெளிவான, முழுமையான தகவல்கள் இல்லை என்பதால் ஆய்வு செய்யப்படவில்லை.
7 ஆயிரத்து 928 வேட்பாளர்களில் 3 ஆயிரத்து 808 வேட்பாளர்கள் பட்டப்படிப்பும் அதற்கு அதிகமான கல்வித்தகுதியும் உடையவர்களாகவும் இருக்கிறார்கள்.
இதில் 3 ஆயிரத்து 477 வேட்பாளர்கள் அதாவது 44 சதவீதம் பேரின் கல்வித்தகுதி என்பது 5-ம் வகுப்பு முதல் 12-ம்வகுப்பு வரை மட்டும்தான். 3 ஆயிரத்து 808 வேட்பாளர்கள் அதாவது 48 சதவீதம் பேர் பட்டப்படிப்பும் அதற்கும் அதிகமாகப் படித்துள்ளனர்.
253 வேட்பாளர்கள் தாங்கள் கல்வியறிவு குறைந்தவர்கள் என்றும், 163 வேட்பாளர்கள் கல்வியறிவு அற்றவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்கள்.
வேட்பாளர்கள் வயது
62 சதவீதம் வேட்பாளர்கள் அதாவது 4 ஆயிரத்து 941 வேட்பாளர்களின் வயது 25 முதல் 50 வயதுக்குள்ளாக இருக்கிறது. 37 சதவீதம் அதாவது 2 ஆயிரத்து 932 வேட்பாளர்கள் வயது 51 முதல் 80 வயதாக இருக்கிறது.
18 சதவீதம் வேட்பாளர்கள் 80 வயதுக்கு அதிகமாகவும் இருக்கிறது. இதில் 35 வேட்பாளர்கள் தங்கள் வயதைக் குறிப்பிடவில்லை, 2 வேட்பாளர்கள் 25 வயதுக்கும் கீழாக இருக்கிறார்கள்
கிரிமினல் வழக்குகள்
1500 வேட்பாளர்கள் அதாவது 19 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள் இருக்கிறது.13 சதவீதம் பேர் அதாவது ஆயிரத்து 70 பேர் மீது தீவிரமான கிரிமினல் வழக்குகள் இருக்கின்றன.
இதில் கட்சி வாரியாகப் பார்த்தால், பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள 433 வேட்பாளர்களில் 40 சதவீதம் பேர் அதாவது 175 பேர் மீது கிரிமினல் வழக்குகள் இருக்கின்றன.
காங்கிரஸ் கட்சியில் 419 வேட்பாளர்களில் 39 சதவீதம் பேர் அதாவது 169 பேர் மீது கிரிமினல் வழக்குகள் இருக்கின்றன. பகுஜன் சமாஜ் கட்சியின் 381 வேட்பாளர்களில் 85 பேர் மீதும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 34 வேட்பாளர்களில் 17 பேர் மீதும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 69 வேட்பாளர்களில் 40 பேர் மீதும் கிரிமினல் வழக்குகள் இருக்கின்றன.
வேட்பாளர்கள் சொத்துவிவரம்
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 7 ஆயிரத்து 928 வேட்பாளர்களில் 29 சதவீதம், அதாவது 2,297 பேர் கோடீஸ்வரர்கள்.
காங்கிரஸ் கட்சியில் 419 வேட்பாளர்களில் 83 சதவீதம் பேர் அதாவது 348 பேர் கோடீஸ்வரர்கள், பாஜகவின் 433 வேட்பாளர்களில் 83 சதவீதம் பேர் அதாவது 361 பேர் கோடீஸ்வரர்கள். பகுஜன் சமாஜ் கட்சியில் 167 வேட்பாளர்களில் 127 பேரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் 20 பேரும், தேசிவாத காங்கிரஸில் 27 வேட்பாளர்களும் கோடீஸ்வரர்கள்.
கோடீஸ்வர வேட்பாளர்
அதிகபட்சமாக பிஹாரைச் சேர்ந்த பாடலிபுத்ரா தொகுதி சுயேட்சை வேட்பாளர் ரமேஷ் குமார் சர்மாவுக்கு ரூ.ஆயிரத்து 107 கோடி சொத்துக்கள் இருக்கின்றன.
அடுத்ததாக தெலங்கானா மாநிலம், சாவேலா தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கொண்டா விஸ்வேஸ்வரா ரெட்டிக்கு ரூ.895 கோடி சொத்துக்கள் இருக்கின்றன. மத்தியப்பிரதேசத்தில் உள்ள சிந்த்வாரா தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் நகுல் நாத்துக்கு ரூ.660 கோடி சொத்துக்கள் இருக்கின்றன.
கடன்
கடன் உள்ளிட்ட பொறுப்புகளில் அதிகபட்சமாக தமிழகத்தின் காங்கிரஸ் கட்சியின் கன்னியாகுமரி வேட்பாளர் எச்.வசந்தகுமாருக்கு ரூ.417கோடி சொத்துக்களும், ரூ.154 கோடி கடனும் இருக்கிறது. உத்தரகாண்ட் மாநிலம், பாஜக வேட்பாளர் மாலா ராஜ்ய லட்சுமிஷாவுக்கு ரூ.154 கோடி சொத்துக்களும், ரூ.135 கோடி கடனும் இருக்கிறது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் நவஜோதி பட்நாயக்கிற்கு ரூ.104 கோடி சொத்துக்களும், ரூ.107 கோடி கடனும் இருக்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.