

உத்தரப்பிரதேச இடைத்தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் தலைவர்களை அதிக கவலையில் ஆழ்த்தியுள்ளன. இங்கு இடைத்தேர்தல் நடைபெற்ற 11 சட்டசபை தொகுதிகளில் 9 தொகுதிகளில் காங்கிரஸ் டெபாசிட் இழந்துள்ளது.
கடந்த 13-ம் உத்தர பிரதேசத்தில் 11 சட்டசபை மற்றும் ஒரு மக்களவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது.
இதில் அம்மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியான மாயாவதி யின் பகுஜன் சமாஜ் போட்டியிடாத நிலையிலும் காங்கிரஸுக்கு குறைந்த வாக்குகளே கிடைத்துள்ளன. இது காங்கிரஸ் தலைமையை அதிர்ச்சி யடையச் செய்துள்ளது.
இது குறித்து ‘தி இந்து’விடம் உ.பி. காங்கிரஸின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான வேணி பிரசாத் வர்மா கூறியதாவது: பொருத்தமற்ற வேட்பாளர்களை போட்டியிட வைத்ததுதான் தோல்விக்கு முக்கியக் காரணம். ஓரிரு வேட்பாளர்கள் தவிர மற்ற யாருமே தங்கள் வெற்றிக்காக பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்க செல்லவில்லை. இதற்கு பதிலாக சில குறிப்பிட்ட தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கலாம்.
அப்படி செய்திருந்தால் பொது மக்கள் இடையேயும் காங்கிரஸ் மீதான நல்ல அபிப்ராயம் பரவியிருக்கும். இந்த தோல்வி காங்கிரஸிற்கு கவலை அளிக்கக் கூடியதாக உள்ளது. கட்சியில் மாற்றங்களைச் செய்வதற்கான நேரம் இது.இவ்வாறு வேணி பிரசாத் வர்மா தெரிவித்தார்.
குறைந்த வாக்கு வங்கி
இந்த தேர்தலில் ஒன்பது தொகுதி களில் டெபாசிட் இழந்ததுடன் காங்கிரஸின் வாக்கு வங்கி பல மடங்கு குறைந்துள்ளது. பிஜ்னோர் தொகுதியில் காங்கிரஸின் வேட்பாள ரான நஸீப் பத்தான் 1.26 சதவீத வாக்கு களையே பெற்று சுயேச்சை வேட் பாளருக்கு அடுத்தபடியாக நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
ரொஹணியா தொகுதியில் வெறும் 1.72 சதவீத வாக்குகளே காங்கிரஸுக்கு கிடைத்துள்ளன. கடந்த முறை 18.61 சதவீத வாக்குகள் பெற்ற லக்னோ கிழக்கு தொகுதியில் இந்தமுறை வெறும் 7.09 வாக்குகளே கிடைத் துள்ளன.
கட்சி மாறியவர் வெற்றி
மொரதாபாத்தின் தாக்கூர்துவாரா வில் கடந்த முறை 21.12 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தநிலையில், தற்போது, 7.48 சதவீத வாக்குகளே கிடைத்துள்ளன.
இங்கு, கடந்தமுறை காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த நவாப் ஜான் என்பவர் இந்தமுறை சமாஜ்வாதி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
ஹமீர்பூரில் கடந்தமுறை 13.17 சதவீதம் வாக்குகள் கிடைத்திருந்தன. தற்போது, 19.74 சதவீத வாக்குகள் கிடைத்து, வாக்குவங்கி சற்றே உயர்ந்துள்ளது.
சர்காரி தொகுதியிலும் கடந்த முறை 11.71 சதவீதமாக இருந்த காங்கிரஸ் வாக்கு வங்கி இந்தமுறை 22.87 சதவீதமாக உயர்ந்துள்ளது. இங்கு பாஜகவை மூன்றாம் இடத்துக்கு தள்ளியும் காங்கிரஸுக்கு வெற்றி கிடைக்கவில்லை.