

மக்களவைத் தேர்தலுக்கு பின் மத்தியில் புதிய அரசு அமைவதில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி முக்கிய பங்கு வகிப்பார் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசினார்.
மக்களவைத் தேர்தல் முடியும் முன்பாகவே புதிய அரசு அமைக்கும் முயற்சியில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ஈடுபட்டுள்ள நிலையில் அவருக்கு போட்டியாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் களமிறங்கியுள்ளார். மாநில கட்சிகளின் கூட்டத்தை மே 21-ம் தேதி டெல்லியில் நடத்த அவர் திட்டமிட்டுள்ளார். இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவர் சந்தித்து பேசினார்.
தொடர்ந்து பல்வேறு மாநில கட்சித் தலைவர்களையும் சந்தித்து பேசி வருகிறார். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை அவர் இன்று சந்தித்து பேசினார். கர்காபூரில் நடந்த திரிணாமுல் காங்கிரஸ் பொதுக்கூட்டத்திலும் அவர் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு பேசியதாவது:
மேற்கு வங்க மாநிலத்திற்கு தேர்தல் பிரசாரத்திற்காக மோடி இதுவரை 16 தடவை வந்து சென்றுள்ளார். இன்னும் அவர் வரப்போவதாக சொல்கிறார்கள். மேற்கு வங்க மாநிலத்தின் வளர்ச்சிப் பணிகளை மேற் கொள்ள மோடி எப்போவதாவது வந்து உண்டா? இதுபற்றி மோடி பதில் சொல்ல வேண்டும்.
மேற்கு வங்காளத்தில் பாஜக தோல்வி உறுதியாகி விட்டது. அதை உணராமல் மோடி போர்க்களத்தில் நின்று கொண்டு இருக்கிறார். நாங்கள் ஜனநாயகத்தை காப்பாற்ற போராடிக் கொண்டு இருக்கிறோம். நமது நாடு காப்பாற்றப்பட வேண்டும். அதற்கு ஆட்சியில் இருந்து மோடி வெளியேற்றப்பட வேண்டும். தற்போது தேசிய அரசியலில் மம்தா பானர்ஜி முக்கிய பங்காற்றி வருகிறார்.
அடுத்து மத்தியில் புதிய ஆட்சி அமைப்பதில் மம்தா பானர்ஜியின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். எனவே மேற்கவங்க மக்கள் மம்தா பானர்ஜியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.