

கோட்சே காந்தியைக் கொன்றார்; சாத்வி பிரக்யா அவரது ஆன்மாவை கொன்றுவிட்டார் என சாத்வி பிரக்யா சிங் தாக்கூருக்கு தனது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார் நோபல் பரிசு வென்ற சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி.
முன்னதாக, மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவை 'சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி' என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக போபால் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளரான பிரக்யா சிங் தாக்குரிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியபோது, 'கோட்சே ஒரு தேசபக்தர்' எனக் கூறினார்.
அவரது இந்தக் கருத்து, நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, சில மணிநேரங்களிலேயே தமது கருத்தினை திரும்பப் பெற்று கொள்வதாக அவர் அறிவித்தார். பிரதமர் மோடியே சாத்வியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தார்.
இந்நிலையில், நோபல் பரிசு வென்ற சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி தனது கண்டனங்களை தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கோட்சே காந்தியின் உடலைத்தான் படுகொலை செய்தார் ஆனால் பிரக்யா போன்றவர்கள் அவரது ஆன்மாவை கொல்கின்றனர். கூடவே அஹிம்சை, அமைதி, சகிப்புத்தன்மை ஆகியனவற்றையும் சேர்த்து சிதைக்கின்றனர். காந்தி கட்சிகளுக்கும் அரசியலுக்கும் அப்பாற்பட்டவர். பாஜக தலைமை உடனடியாக இத்தகைய நபர்களை கட்சியிலிருந்து நீக்க வேண்டும். சிறு ஆதாயங்களுக்காக இவர்களை விட்டுவைத்தல் ராஜ தர்மத்துக்கு எதிரானது" எனப் பதிவிட்டுள்ளார்.
சாத்வி பிரக்யா தாக்கூரை காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முஃப்தி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோரும் கண்டித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மஹிந்திரா குரூப் நிறுவனத்தின் தலைவர் தொழிலதிபர் ஆனந்த் மகிந்திராவும் கண்டனம் தெரிவித்தார். தேசம் தாலிபன் ஆட்சியை நோக்கி நகர்கிறது என்றார்.