

நான் உயிருடன் இருக்கும்வரை மோடியை பிரதமராகவே பார்க்க விரும்புகிறேன் என நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார் பாலிவுட் பழம்பெரும் நடிகர் ஜிதேந்திரா.
நரேந்திர மோடி இன்னும் சற்று நேரத்தில் பிரதமராகப் பதவியேற்கவுள்ளார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த நடிகர் ஜிதேந்திரா, "நான் உயிருடன் இருக்கும்வரை மோடியை பிரதமராகவே பார்க்க விரும்புகிறேன்.
இது ஒரு வரலாற்றுத் தருணம். நான் மோடிஜியின் மிகப்பெரிய ரசிகன். இந்த தேசம் ஓர் அழகான கைகளில் சேர்ந்திருக்கிறது என நினைக்கிறேன். என் தேசமக்களுக்காக நான் மகிழ்கிறேன். இன்று இங்கு நிற்பதிலும் எனக்கு மகிழ்ச்சி" என்றார்.
மோடி பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க, பாலிவுட் பிரபலங்கள் அனுபம் கேர், விவேக் ஓபராய், பொம்மன் இரானி, ஹேமா மாலினி, கங்கனா ரனாவத், ராகேஷ் ஓம்பிரகாச் மெஹ்ரா ஆகியோர் வருகை தந்துள்ளனர்.
நடந்து முடிந்த 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 348 தொகுதிகளைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. பாஜக மட்டுமே 303 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
காங்கிரஸ் 52 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 90 தொகுதிகள் மட்டுமே கிடைத்தது.