Published : 18 May 2019 12:07 PM
Last Updated : 18 May 2019 12:07 PM

பிரதமர் மோடிக்கு நற்சான்று: தேர்தல் ஆணையக் கூட்டத்தை தவிர்க்க ஆணையர் லவாசா முடிவு?

பிரதமர் மோடியின் பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நற்சான்று அளித்த விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படும் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா, தேரதல் வழிகாட்டும் நெறிமுறைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காமல் விலகி இருக்க அனுமதிக்குமாறு கோரி தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித் ஷாவும்,  மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையிலும், ராணுவத்தினரை சுட்டிக்காட்டியும் தேர்தல் பிரச்சாரங்களில் பேசுகின்றனர், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி காங்கிரஸ் எம்.பி.சுஷ்மிதா தேவ் 11 புகார்களைத் தெரிவித்திருந்தார்.

வயநாட்டில் போட்டியிடும் ராகுல் காந்தி குறித்து பிரதமர் மோடி கடந்த மாதம் 1-ம் தேதி மகாராஷ்டிராவின் வார்தாவில் பேசிய பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நற்சான்று அளித்தது. மேலும், புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக பாலகோட்டில் விமானப்படை நடத்திய தாக்குதல் குறித்து 9-ம் தேதி மோடி  பேசிய பேச்சிலும் தவறில்லை என்று தேர்தல் ஆணையம் நற்சான்று அளித்தது.

இதேபோல, அமித் ஷா பேசிய பேச்சிலும் விதிமுறை மீறல் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. 7 மனுக்கள் மீது தீர்வு கண்ட தேர்தல் ஆணையம், பிரதமர் மோடி, அமித் ஷா பேசியதில் தவறில்லை எனத் தெரிவித்தது.

இந்நிலையில், தேர்தல் ஆணையர்கள் 3 பேரில் ஒருவரான அசோக் லவாசா பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோரின் பேச்சுக்கு நற்சான்று அளித்த விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் வெளியானது.

தேர்தல் ஆணையத்தின் உயர் அதிகார பொறுப்பில், தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் ஆணையர்கள் அசோக் லவாசா, சுஷில் சந்திரா ஆகியோர் உள்ளனர். தேர்தல் விதிமுறை புகார்கள் குறித்து இந்த மூவர் குழுதான் முடிவெடுக்கும். புகார்கள் குறித்து இந்த மூவர் குழு ஒரு மனதாக முடி வெடுக்க வேண்டும் என்பது விதிமுறை. அப்படி இல்லாத பட்சத்தில் பெரும்பான்மை முடிவே இறுதியானது.

பெரும்பான்மை அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுகளில் தனது கருத்து சிறுபான்மையாக இருப்பதால் பதிவாகாமல் போய் விடுவதாக அசோக் லவாசா கூறியதாக தகவல் வெளியானது. இதையடுத்து தேர்தல் ஆணையத்தின் தேர்தல் விதிமுறைகள் மீறல் தொடர்பான புகார்களை விசாரிக்கும் கூட்டத்தில் பங்கேற்பதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்கும்படி லவாசா வேண்டுகோள் விடுத்தாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் ஆரோராவுக்கு, ஆணையர் அசோக் லாவாசா மே.4 அன்று எழுதியுள்ள கடிதத்தில், சிறுபான்மை முடிவுகள் இறுதி செய்யப்படாத போது, தேர்தல் ஆணையக் கூட்டத்தில் பங்கேற்கமால் நான் விலகி இருக்கும் சூழல் ஏற்படுகிறது.

கூட்டத்தில் நான் கலந்துகொள்வது அர்த்தமற்றதாகிறது’’ என தெரிவித்ததாக கூறப்படுகிறது ஆனால் இதுபோன்ற கூட்டம் சமீபத்தில் நடைபெறவில்லை என தலைமை தேர்தல் ஆணையர் தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x