

ஒடிசாவில் புயல் தாக்கியதற்கு முன்பும், பின்பும் மின்சாரம் இருந்த நிலையை விளக்கும் அரிய புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.
தென் வங்கக் கடலில் உருவான ஃபானி புயல், நேற்று முன்தினம் ஒடிசாவில் கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 200 கி.மீ. முதல் 245 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதன்காரணமாக ஒடிசாவின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
இதுவரை 12 பேர் உயிரிழந் துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
இப்புயல் உருவானது முதலே இந்திய வானிலை ஆய்வு மையம் துல்லியமாகக் கணித்து இடைவிடாமல் தகவல்களைத் தந்ததால் பெருமளவு உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக ஐ.நாவும் பாராட்டு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் ஒடிசாவில் புயல் தாக்கியபோது, மின்சாரம் தடைபட்டதை தெளிவுபடுத்தும் அரிய புகைப்படங்களை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது.
அதன்படி புவனேஸ்வர் நகரில் விமானநிலைத்தை ஒட்டியுள்ள பகுதியில் புயலுக்கு முன்பாக ஏப்ரல் 30ம் தேதி எடுக்கப்பட்ட புகைப்பட்டத்தில் ஏராளமான மின் விளக்குகள் எரிவதை பார்க்க முடிகிறது. அதேபோல், புயல் தாக்கிய பிறகு மே 5-ம் தேதி இன்னமும் பல இடங்களில் மின்சார இணைப்பு வழங்கப்படாத சூழல் இருப்பதை தெரிந்து கொள்ள முடிகிறது.
புவனேஸ்வர் மட்டுமின்றி கட்டாக் நகரின் முக்கிய பகுதிகளிலும் நாசாவின் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 30ம் தேதியும், மே 5-ம் தேதியும் எடுக்கப்பட்ட அந்த புகைப்படங்களில் மின்சார இணைப்பு குறைவான அளவு இருப்பதை காண முடிகிறது.