Published : 29 May 2019 09:36 PM
Last Updated : 29 May 2019 09:36 PM

அருண் ஜேட்லியுடன் பிரதமர் மோடி திடீர் சந்திப்பு: மத்திய அமைச்சர் பதவி ஏற்க வலியுறுத்தல்

உடல்நிலை காரணமாக தனக்கு மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் என்று அருண் ஜேட்லி கூறியிருந்த நிலையில், அவரது வீட்டுக்கு பிரதமர் மோடி நேரில் சென்று பேசினார்.

பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான அருண் ஜேட்லி,  முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலத்தில் மத்திய சட்டத்துறை அமைச்சராகப் பணியாற்றினார். அதன்பின் காங்கிரஸ் ஆட்சியின் போது மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.

அதன்பின் 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக வென்று  பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி அமைந்தபோது, அருண் ஜேட்லிக்கு நிதித்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

இவர் நிதியமைச்சராக இருந்தபோதுதான் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி வரி போன்றவை அமல்படுத்தப்பட்டு பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. குறிப்பாக பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்து கடுமையாக விமர்சித்தனர், ஜிஎஸ்டி வரியை முறைப்படி அமல்படுத்தவில்லை எனவும் குற்றம்சாட்டினார்கள்.

இந்தசூழலில் கடந்த 2 ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அருண் ஜேட்லி அவதிப்பட்டு வந்தார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை அமெரிக்காவில் செய்து ஜேட்லி 3 மாதங்கள் ஓய்வு எடுத்து அமைச்சரவையில் இருந்து ஒதுங்கினார். அவரின் பொறுப்பை கூடுதலாக பியூஷ் கோயல் கவனித்தார். அதன்பின் 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீண்டும் அமைச்சரானார்.

பின்னர் ஜனவரிமாதம் மீண்டும் அமெரிக்கா சென்ற ஜேட்லி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யவும் இந்தியாவுக்கு வரவில்லை. இதனால் இடைக்கால பட்ஜெட்டை பியூஷ் கோயல்தான் தாக்கல் செய்தார். அதுமட்டுமல்லாமல் 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் வெற்றிக்குப்பின் கட்சி அலுவலகத்திலும் ஜேட்லியைக் காணமுடியவில்லை என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், பிரதமர் மோடிக்கு அருண் ஜேட்லி கடிதத்தில் ‘‘கடந்த 5 ஆண்டுகள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் அங்கம் வகித்து அமைச்சராக பணியாற்றியது எனக்கு மிகப்பெரிய பெருமை, ஏராளமான அனுபவங்கள் கிடைத்தன.

என்னுடைய உடல்நிலைக்கும், என்னுடைய சிகிச்சைக்கும், எனக்கும் போதுமான அளவு நேரம் ஒதுக்க வேண்டியது இருக்கிறது. ஆதலால் புதிதாக அமையும் அரசில் எனக்கு எந்தவிதமான பொறுப்பும் அளிக்க வேண்டாம்’’ என தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் பிரதமர் மோடி திடீரென அருண் ஜேட்லி வீட்டுக்கு நேரடியாக சென்றார். சிறிது நேரம் பேசிவிட்டு திரும்பினார். அமைச்சர் பதவி வேண்டாம் என்ற முடிவை மறு பரிசீலனை செய்யுமாறு அருண் ஜேட்லியிடம் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x