

மக்கள் தவறென்று நிரூபிப்பார்கள் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் குறித்து பிரகாஷ் ராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் (எக்ஸிட் போல்ஸ்) தெரிவிக்கின்றன.
டைம்ஸ் நவ் பாஜக 306 இடங்களைப் பிடிக்கும் என்றும், ரிபப்ளிக் சிவோட்டர் பாஜக கூட்டணி 287 இடங்களைப் பிடிக்கும், நியூஸ் 18 பாஜக கூட்டணி 336 இடங்களைப் பிடிக்கும் என்றும், நியூஸ் நேஷன் பாஜக 290 இடங்களைக் கைப்பற்றும் என்றும், நியூஸ் எக்ஸ் பாஜக கூட்டணி 242 இடங்களைக் கைப்பற்றும் என்று கணிப்புகளை வெளியிட்டுள்ளன. இந்தக் கணிப்புகளால் பாஜக கூட்டணி கட்சியினர் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
இந்நிலையில் தொடர்ச்சியாக பிரதமர் மோடியையும், பாஜகவையும் சாடி வரும் பிரகாஷ் ராஜ், கருத்து கணிப்பு முடிவுகள் குறித்து தனது ட்விட்டர் பதிவில் “தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள். கெட்டகனவு திரும்ப வரும் என சிலர் பகல்கனவு காணட்டும். ஆனால் 23ஆம் தேதி குடிமக்கள் அதை தவறென்று நிரூபிப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேட்சையாக பிரகாஷ்ராஜ் போட்டியிடுவது இருப்பது குறிப்பிடத்தக்கது.