Last Updated : 06 May, 2019 05:46 PM

 

Published : 06 May 2019 05:46 PM
Last Updated : 06 May 2019 05:46 PM

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் மீதான பாலியல் புகார் தள்ளுபடி: உச்ச நீதிமன்ற விசாரணைக் குழு உத்தரவு

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் மீது நீதிமன்ற முன்னாள் பெண் ஊழியர் கூறிய பாலியல் குற்றச்சாட்டில் எந்தவிதமான முகாந்திரமும் இல்லை எனக் கூறி அந்தப் புகாரை தள்ளுபடி செய்து 3 நீதிபதிகள் கொண்ட விசாரணைக் குழு உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றிய முன்னாள் பெண் ஊழியர் ஒருவர், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்ததாக இரண்டு சம்பவங்களைக் குறிப்பிட்டு நீதிபதி ரஞ்சன் கோகய் மீது பாலியல் அத்துமீறல் புகார்களை கடந்த மாதம் 19-ம் தேதி தெரிவித்தார். இந்தப் புகார்களை உச்ச நீதிமன்றத்தில் உள்ள 22 நீதிபதிகளுக்கும் அந்தப் பெண் பிரமாணப் பத்திரமாக அனுப்பினார்.

இதைத்தொடர்ந்து அந்தப் புகார் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், நீதிபதிகள் அருண் மிஸ்ரா, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டது. ஆனால், நீதிபதிகள் உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை.

3 நீதிபதிகள் குழு

இதையடுத்து, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் பரிந்துரையின் அடிப்படையில் அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் மிக மூத்த நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்கப்பட்டது. அந்த அமர்வில் மூத்த நீதிபதி என்.வி.ரமணா, பெண் நீதிபதி இந்திரா பானர்ஜி ஆகியோர் இடம் பெற்றனர்.

நீதிபதி ரமணா விலகல்

இந்நிலையில் புகார் அளித்த முன்னாள் நீதிமன்ற பெண் ஊழியர் விசாரணைக் குழுவில் நீதிபதி என்.வி.ரமணா இடம் பெற்றிருப்பது குறித்து அதிருப்தி தெரிவித்து விசாரணைக் குழு தலைமை நீதிபதி பாப்டேவுக்கு கடிதம் எழுதினார். அதில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் வீட்டில் தான் பணியாற்றி வரும்போது, அங்கு நீதிபதி என்.வி. ரமணா அடிக்கடி அங்கு வருவார். இருவரும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் நண்பர்களாக இருக்கும் போது விசாரணையின் தன்மை குறித்து கேள்வி எழுப்பினார். மேலும், விசாரணைக் குழுவில் ஒரே ஒரு பெண் நீதிபதி இந்திரா பானர்ஜி மட்டும் இருந்தார்.

நீதிபதி மல்ஹோத்ரா நியமனம்

ஆனால், விசாகா குழு விதிமுறைகளின்படி, விசாரணைக் குழு அமைக்கப்படவில்லை. விசாகா வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, பாலியல் புகார்களை விசாரிக்கும் குழுவில் பெரும்பான்மை பெண்கள் இடம் பெற வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.

இதையடுத்து நீதிபதி என்.வி.ரமணா தாமாக முன்வந்து விசாரணைக் குழுவில் இருந்து விலகிக்கொண்டார். அதற்குப் பதிலாக நீதிபதி இந்து மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டார்.

ரகசிய விசாரணை

இந்நிலையில், புகார் அளித்த முன்னாள் பெண் ஊழியர்  அளித்த புகாரை நீதிபதி பாப்டே தலைமையில் நீதிபதிகள் இந்து மல்ஹோத்ரா, இந்திரா பானர்ஜி ஆகியோர் விசாரித்தனர். மிகவும் ரகசியமான முறையில், மூடப்பட்ட அறையில் விசாரணை நாள்தோறும் நடந்து வந்தது.   

விசாரணைக் குழு முன் ஆஜராகி வந்த அந்தப் பெண் ஊழியர் தன்னுடன் வழக்கறிஞர் ஒருவரையும் அனுமதிக்க வேண்டும் கோரிக்கை விடுத்தார். ஆனால் அதற்கு நீதிபதி பாப்டே தலைமையிலான குழு அனுமதி மறுத்தது. இதனால், விசாரணைக் குழுவில் இருந்து அந்தப் பெண் ஊழியர் திடீரென விலகினார்.

கடைசியாக கடந்த மாதம் 30-ம் தேதிக்குப் பின் ஆஜராகவில்லை எனத் தெரிகிறது. இந்த விசாரணைக் குழுவில் தனக்கு நியாயம் கிடைக்காது, ஒருதரப்பாக தீர்ப்பு தரப்படும் எனக் கூறி விசாரணையில் இருந்து அவர் விலகியதாகக் கூறப்படுகிறது.

தலைமை நீதிபதி ஆஜர்

இதற்கிடையே வரலாற்றில் முதல் முறையாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், உள்விசாரணைக் குழுவில் கடந்த புதன்கிழமை ஆஜராகி பல்வேறு விளக்கங்களை அளித்தார்.

புகார் தள்ளுபடி

இந்நிலையில் நீதிபதி பாப்டே தலைமையிலான நீதிபதிகள் இந்து மல்ஹோத்ரா, இந்திரா பானர்ஜி கொண்ட அமர்வு பெண் ஊழியர் அளித்த புகாரை ஆய்வு செய்தது.

இது தொடர்பாக நீதிபதிகள் அமர்வு ''தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய்க்கு எதிராக முன்னாள் பெண் ஊழியர் அளித்த புகாரில் எந்தவிதமான முகாந்திரமும் இல்லை. ஆதாரங்கள் ஏதும் இல்லை எனக் கண்டறியப்பட்டது.

இது தொடர்பாக விசாரணை நடத்திய நீதிமன்ற உள் விசாரணைக் குழு தனது அறிக்கையை 5-ம் தேதி(நேற்று) தலைமை நீதிபதிக்கும், தலைமை நீதிபதிக்கு அடுத்த இடத்தில் இருக்கும் மூத்த நீதிபதிக்கும் அனுப்பி வைத்தது.

கடந்த மாதம் 19-ம் தேதி நீதிமன்ற முன்னாள் பெண் ஊழியர் அளித்த புகாரில் எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை என உறுதி செய்யப்பட்டது. விசாரணை தொடர்பான அறிக்கை மிகவும் ரகசியமானது என்பதால் அதை பொதுவெளியில் வெளியிட முடியாது" எனத் தெரிவித்தது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x