மோடியின் தியானத்தைக் கிண்டலடித்த ட்விங்கிள் கண்ணா: வைரலாகும் புகைப்படம்

மோடியின் தியானத்தைக் கிண்டலடித்த ட்விங்கிள் கண்ணா: வைரலாகும் புகைப்படம்
Updated on
1 min read

மோடியின் தியானத்தைக் கிண்டலடித்து ட்விங்கிள் கண்ணா பகிர்ந்த ட்வீட் இணையத்தில் வைரலாகி, கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

மக்களவை இறுதிக்கட்டத் தேர்தல் பிரச்சாரம் கடந்த வெள்ளிக்கிழமை முடிந்தவுடன், உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் சிவன் கோயிலுக்கு பிரதமர் மோடி சனிக்கிழமை அன்று சென்றார். அங்கு சுவாமியை வழிபட்டார்.

அங்கு செய்யப்பட்டுள்ள வளர்ச்சிப் பணிகளைப் பார்வையிட்டு அங்கு மலைப்பகுதியில் அமைந்துள்ள குகையில் 17 மணி நேரம் தியானம் செய்தார். அவர் தியானம் செய்த குகை கடல் மட்டத்தில் இருந்து 12 ஆயிரம் அடி உயரத்தில் இயற்கையாக அமைந்தது. இயற்கையான குகையாக இருந் தாலும் பாறைகளை வெட்டி காற்றும் வெளிச்சமும் வரும் வகையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.

குகையில் மின்சாரம், குடிநீர் ஆகிய வசதிகள் செய்யப்பட்டு, அழைப்பு மணி, தொலைபேசி, கழிவறை உள்ளிட்ட வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டே இது தயாராகிவிட்டாலும் பூட்டி வைக்கப்பட்டிருந்தது. மோடியின் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமராக்களும் குகையில் பொருத்தப்பட்டன. இதற்கிடையே மோடி தியானம் செய்வது தொடர்பான புகைப்படங்களும் செய்திகளும் இணையத்தில் வைரலாகின.

இந்நிலையில் மோடி செய்த தியானத்தைக் கிண்டலடித்து பாலிவுட் நடிகை ட்விங்கிள் கண்ணா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பான புகைப்படமும் வைரலாகி வருகிறது.

இதுதொடர்பாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ட்விங்கிள் கண்ணா, ''கடந்த சில நாட்களாக ஏராளமான ஆன்மிகப் புகைப்படங்களைப் பார்த்த பிறகு, பயிலரங்கு ஒன்றை ஆரம்பிக்கிறேன். எல்லோரும் அதில் கலந்துகொள்ளுங்கள். அதன் பெயர் 'தியான போட்டோகிராபி - போஸ்களும் கோணங்களும்'.

திருமண போட்டோகிராபியை அடுத்து, தியான போட்டோகிராபிதான் அடுத்த பெரிய விஷயமாக இருக்கும் என்று நினைக்கிறேன்'' என தியானம் செய்வது போன்ற புகைப்படத்தோடு பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in