

மேற்குவங்கத்தில் சாரதா சிட்பண்ட் ஊழல் தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சிரிஞ்ஜாய் போஸிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிரிஞ்ஜாய் போஸ், ‘பிரதிதின்’ என்ற வங்க மொழி பத்திரிகை யின் ஆசிரியராகவும் உள்ளார். அவர், சாரதா குழுமத் தலைவர் சுதிப்தா சென் தொடங்கிய தொலைக்காட்சி சேனலுக்கு உதவியாக செயல்பட்டதாகவும், அதற்காக பெரும்தொகையை கட்டணமாக பெற்றதாகவும் கூறப்படுகிறது.
இதுபோன்று தங்களுக்கு பணம் அளிக்கும் பட்சத்தில், சாரதா நிறுவனத்தின் செயல் பாடுகளுக்கு எந்தவிதமான இடையூறும் ஏற்படாமல் தாங்கள் பார்த்துக் கொள்வதாகவும், முதல்வர் மம்தா பானர்ஜியிடம் தங்களுக்கு செல்வாக்கு உள்ளதாகவும் சிரிஞ்ஜாய் போஸ் கூறியதாக சுதிப்தா சென் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2 ஆண்டுகளாக ரூ. 20 கோடியை சுதிப்தா சென்னிட மிருந்து சிரிஞ்ஜாய் போஸ் பெற்றதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சிரிஞ்ஜாய் போஸிடம் புதன்கிழமை சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி யுள்ளனர்.
நவம்பரில் குற்றப்பத்திரிகை
இந்த வழக்கில் குற்றம் சாட்டப் பட்டுள்ளவர்கள் மீது நவம்பர் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்போவதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. மேற்கு வங்கம், அசாம், ஒடிஸா ஆகிய மாநிலங்களில் உள்ள ரூ.350 கோடி மதிப்பிலான சொத்து களை அமலாக்கத்துறை முடக்கி யுள்ளது. சாரதா குழுமத்தின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.70 லட்சத்தையும் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
சாரதா சிட்பண்ட் ஊழலில் இதுவரை அமலாக்கத்துறை தரப்பில் 3 பேரும், சிபிஐ தரப்பில் 2 பேரும், மேற்கு வங்க மாநில காவல் துறை சார்பில் 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.