

அனைத்து விதமான தேர்தல் கணக்குகளையும் எங்களுக்கும், மக்களுக்கும் இடையிலான தொடர்பு, எண்ண அலைகள் (கெமிஸ்ட்ரி) வென்றுவிட்டது என்று பிரதமர் மோடி பெருமிதத்தோடு பேசினார்.
17-வது மக்களவைத் தேர்தலில் பாஜக 303 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சி அமைக்க இருக்கிறது. வரும் 30-ம் தேதி பிரதமராக மோடி குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவி ஏற்கிறார்.
அதற்கு முன்னதாக தனது தாய் ஹிராபென்னிடம் ஆசி பெறுவதற்காக நேற்று அகமதாபாத் சென்றார். பின்னர் அங்கிருந்து இன்று காலை விமானம் மூலம் தனது தொகுதியான வாரணாசிக்கு பிரதமர் மோடி வந்தார். அங்கு மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
வாரணாசியில் உள்ள விஸ்வநாதர் கோயில், காலபைரவர் கோயிலில் வழிபாடு செய்த பிரதமர் மோடி, வாரணாசி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
வாரணாசியில் போட்டியிட்ட பிரதமர் மோடியை மிக அதிகமான வாக்குவித்தியாசத்தில் அத்தொகுதி மக்கள் வெற்றி பெறவைத்துள்ளார்கள்.
அந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
''தேர்தல் கணக்குகள் அனைத்தையும் தாண்டி, மக்களுக்கும் எங்களுக்கும் இடையிலான உறவு, எண்ண அலைகள் ஒத்துவந்து (கெமிஸ்ட்ரி) வெற்றி பெற்றுள்ளோம் என்பதை அரசியல் ஆய்வாளர்கள் ஒப்புக்கொள்வார்கள்.
இந்த தேசத்துக்கு நான் பிரதமராக இருக்கலாம். ஆனால், இந்தத் தொகுதி மக்களுக்கும், உங்களுக்கும் நான் எம்.பி. உங்கள் சேவகன்.
இந்தத் தேர்தலில் கட்சித் தொண்டர்களும், அவர்கள் செய்த பணியும் அளப்பரியது. இத்தேர்தல் வெற்றிக்கு முழுமையான சொந்தக்காரர்கள் கட்சியில் அடிமட்டத்தில் இருக்கும் தொண்டர்கள்தான்.
ஏனென்றால்,அவர்கள்தான் அரசின் கொள்கைகள், திட்டங்கள் போன்றவற்றை மக்களிடம் கொண்டு சேர்த்தார்கள். உத்தரப் பிரதேசம் தேசத்துக்கு வழிகாட்டியாக இருக்கிறது.
அரசுக்கும், கட்சிக்கும் இடையிலான சரியான புரிந்துணர்வு, கூட்டுறவு இருக்கிறது. எனக்கு எதிராக போட்டியிட்டவர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.
அதேசமயம், அரசியலில் ஒருவிதமான தீண்டாமை இன்னும் நிலவுகிறது. மேற்கு வங்கம், திரிபுரா, கேரளாவில் பாஜகவினர் தங்களின் சித்தாந்தங்கள், கொள்கைகளுக்காக கொல்லப்படுகிறார்கள்''.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.