

மக்களவைத் தேர்தல் முடியும் முன்பாகவே புதிய அரசு அமைக்கும் முயற்சியில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஈடுபட்டுள்ள நிலையில் அவர் இன்று மாலை சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் தற்போது நடைபெற்று வரும் நிலையில் பாஜகவுக்கு எதிராக திமுக உள்ளிட்ட கட்சிகளை ஒன்றிணைத்து காங்கிரஸ் தேர்தல் களம் கண்டு வருகிறது. மக்களவைத் தேர்தல் முழுமையாக முடிவடையும் முன்பாகவே புதிய அரசு அமைப்பது தொடர்பாக முயற்சிகளை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் மீண்டும் மேற்கொண்டுள்ளார்.
1996-ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு நடந்ததை போல பாஜக, காங்கிரஸ் அல்லாமல் தென் மாநிலங்களைச் சேர்ந்த ஒருவரை பிரதமர் பதவியில் அமர்த்த வேண்டும் என்ற இலக்குடன் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் காய் நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக, கர்நாடக முதல்வர் குமாரசாமியுடன் அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். பின்னர், கேரளா சென்ற அவர், அம்மாநில முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான பினராயி விஜயனை சந்திரசேகர் ராவ் சந்தித்துப் பேசினார். வரும் 13-ம் தேதி அவர் சென்னை வந்து திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்திக்க திட்டமிட்டார்.
ஆனால், 4 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் தீவிரமாக இருப்பதால் இந்த சந்திப்பு நடைபெறாது என திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
சந்திரசேகர ராவ் மாநிலக்கட்சிகளின் கூட்டணி அமைக்கவே முயற்சிப்பதாக கூறப்பட்டாலும், அவருக்கு பாஜக ஆதரவுடன் செயல்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. இதனால் அவரை சந்திப்பதில் தர்மசங்கடங்கள் எழுந்ததாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தநிலையில் ஸ்டாலின் - சந்திரசேகர் ராவ் சந்திப்பு திட்டமிட்டபடி நடைபெறவுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. சென்னை வரும் சந்திரசேகர் ராவ் இன்று மாலை 4 மணி அளவில் ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் இல்லத்தில் அவரை சந்தித்து பேசவுள்ளதாக தெகவல் வெளியாகியுள்ளது. எனினும் இந்த தகவலை திமுக வட்டாரங்கள் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.