Published : 03 May 2019 11:48 AM
Last Updated : 03 May 2019 11:48 AM

பிரதமர் மோடி, ராகுல் பேச்சில் விதிமுறை மீறல் இல்லை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ராஜஸ்தானின் பார்மர் பகுதியில் பிரதமர் மோடியின் பேச்சிலும், மத்தியப்பிரதேசம் ஜபல்பூரில் ராகுல் காந்தி பேசிய  பேச்சிலும் எந்தவிதமான தேர்தல் விதிமுறை மீறலும் இல்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோர் மீது 11 தேர்தல் விதிமுறை புகார்களை காங்கிரஸ் அளித்துள்ள நிலையில் அதில் 2 புகார்களை மட்டும் தேர்தல் ஆணையம் தீர்வு கண்டிருந்தது. மீதமுள்ள புகார்களுக்கு வரும் 6-ம் தேதிக்குள் தீர்வு காணக்கோரி உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

ராஜஸ்தானின் பார்மர் நகரில் தேர்தல் பிரச்சாரத்தில் கடந்த மாதம் 21-ம் தேதி பிரதமர் மோடி பேசினார். அப்போது, " முன்பெல்லாம் பாகிஸ்தானிடம் அணு ஆயுத பட்டன் இருக்கிறது. கவனமாகச் செயல்படுங்கள் என்று கூறினார்கள். ஆனால், நம்மிடமும் இப்போது அணு ஆயுதங்கள் இருக்கின்றன, பட்டன் இருக்கிறது. இதை தீபாவளிக்கு வெடிக்கவா வைத்திருக்கிறோம் " என்று பேசினார்.

பிரதமர் மோடியின் இந்த பேச்சு குறித்து எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து ராஜஸ்தான் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் இருந்து அறிக்கையைப் பெற்று தேர்தல் ஆணையம் ஆய்வு செய்தது.

ராஜஸ்தான் தலைமைத் தேர்தல் அதிகாரி 10 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்தார். அந்த அறிக்கையை ஆய்வு செய்த தேர்தல் ஆணையம், பிரதமர் மோடியின் பேச்சில் எந்தவிதமான தேர்தல் நடத்தை விதிமுறை மீறலும் இல்லை. தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் இருக்கிறது. இதில் விதிமுறைமீறல் இருப்பதாகக் கருதவில்லை எனத் தெரிவித்தது.

ஏற்கெனவே பிரதமர் மோடி லாத்தூர், வார்தா ஆகிய இடங்களில் பேசிய போது தேர்தல் விதிமுறை மீறல்கள் செய்தார் என்று வழங்கப்பட்ட புகார்களை தேர்தல் ஆணையம் மறுத்தது குறிப்பிடத்தக்கது.

ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த மாதம் 23-ம் தேதி மத்தியப்பிரதேசம் ஜபல்பூர் சிரோஹாவில்  தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, பாஜக தலைவர் அமித் ஷாவை கொலைக்குற்றவாளி என்று பேசினார்.

ராகுலின் இந்த பேச்சுக்கு எதிராக பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் இருந்து விளக்கமான அறிக்கையை தேர்தல் ஆணையம் பெற்றது.அந்த அறிக்கையை தீவிரமாக ஆய்வு செய்த தேர்தல் ஆணையம், ராகுல் காந்தியின் பேச்சில் எந்தவிதமான தேர்தல் விதிமுறை மீறலும் இல்லை எனத் தெரிவித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x