நாளை நீட் தேர்வு: புயல் பாதிப்பால் ஒடிசாவில் ஒத்திவைப்பு

நாளை நீட் தேர்வு: புயல் பாதிப்பால் ஒடிசாவில் ஒத்திவைப்பு
Updated on
1 min read

நாடுமுழுவதும் நாளை நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், ஓடிசா மாநிலத்தில் புயல் பாதிப்பு காரணமாக இந்த தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவான ஃபானி புயல் நேற்று ஒடிசாவில் கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 245 கி.மீ. வேகத்தில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக 6 பேர் உயிரிழந்தனர். 160 பேர் படுகாயம் அடைந்தனர்.

தலைநகர் புவனேஸ்வர் உட்பட 52 நக ரங்கள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் மரங்கள், மின் கம்பங்கள், தொலைத்தொடர்பு கோபுரங்கள் முறிந்து விழுந்தன. அந்த நகரங்கள், கிராமங் களில் சாலை போக்குவரத்து முற்றிலு மாக முடங்கியது.

பல்வேறு பகுதிகளில் தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டது. 4 தொலைக்காட்சி சேனல் களின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. 14 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முழு வீச்சில் நிவாரணப் பணிகள் நடந்து வருகின்றன.

இந்தநிலையில், நீட் எனப்படும் பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான தகுதித் தேர்வு நாளை நாடுமுழுவதும் நடைபெறுகிறது.

ஒடிசாவில் புயல் பாதிப்பு காரணமாக மீட்பு பணிகள் நடந்து வருவதால் நீட் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என மாநில அரசு கேட்டுக்கொண்டது. அதனை ஏற்று ஒடிசாவில் மட்டும் நாளை நீட் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மனிதவள மேம்பாட்டு அமைச்சக செயலாளர் சுப்பிரமணியம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

நீட் தேர்வு நாளை நடைபெறவுள்ள நிலையில் ஒடிசா மாநிலத்தில் மட்டும் ஒத்தி வைக்கப்படுகிறது. ஃபானி புயல் பாதிப்பு காரணமாக அம்மாநிலத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதால் நீட் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என ஒடிசா மாநில அரசுக் கேட்டுக் கொண்டது. இதை ஏற்று ஒடிசாவில் மட்டும் நீட் தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in