Last Updated : 16 May, 2019 12:00 AM

 

Published : 16 May 2019 12:00 AM
Last Updated : 16 May 2019 12:00 AM

கார்கேவை ஏன் கர்நாடக முதல்வராக்கவில்லை?- சித்தராமையாவுக்கு குமாரசாமி மறைமுக‌ கேள்வி

காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அரசியலில் நீண்ட அனுபவமும், மக்கள் செல்வாக்கும் வாய்ந்தவர். அவரை ஏன் முதல்வராக தேர்வு செய்யவில்லை. இந்த விவகாரத்தில் காங்கிரஸார் கார்கேவுக்கு அநீதி இழைத்துவிட்டனர் என குமாரசாமி தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் அமைச்சர் பதவி பங்கீடு, துறை ஒதுக்கீடு, வாரிய தலைவர் ப‌தவி பகிர்வு உள்ளிட்டவற்றில் இரு கட்சியினரிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, கர்நாடக உள்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், ‘‘சித்தராமையா மீண்டும் கர்நாடக முதல்வராக பொறுப்பேற்பார்'' என அண்மையில் தெரிவித்தார். இதற்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சுதாகர், பசவராஜ் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர்.

இதனை கண்டித்த மஜத மாநில தலைவர் விஸ்வநாத், ‘‘கடந்த 5 ஆண்டுகள் கர்நாடகாவை ஆண்ட சித்தராமையா சிறப்பான முறையில் ஆட்சி செய்யவில்லை. தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வளர்ச்சித் திட்டங்களை அவர் நிறைவேற்றவில்லை. இத்தகைய சூழலில் அவர் மீண்டும் முதல்வராக வேண்டும் என கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. குமாரசாமியே அடுத்த 5 ஆண்டுகளுக்கு முதல்வராக நீடிப்பார்'' என தெரிவித்தார்.

இதற்கு, முன்னாள் முதல்வர் சித்தராமையா, ‘‘தேர்தல் அறிக்கையில் தெரிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் நான் நிறைவேற்றியுள்ளேன். என்னைப் பற்றி பேசுவதற்கு முன்பு என் சாதனைகளை விஸ்வநாத் தெரிந்துகொள்ள வேண்டும். கூட்டணியில் இருக்கும்போது, மஜத தலைவர்கள் நாவடக்கத்தோடு பேச வேண்டும். கூட்டணி தர்மத்துக்கு கட்டுப்பட்டு நான் அமைதியாக இருக்கிறேன்'' என்றார்.

இந்நிலையில், குல்பர்காவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் குமாரசாமி பேசியதாவது:‘‘நான் முதல்வராக இருக்கும்போதே என்னை கீழே தள்ளிவிட்டு, ஒரு சிலர் மீண்டும் முதல்வராக வேண்டும் என்று நினைக்கிறார்கள். காங்கிரஸில் அனுபவமும், மக்கள் செல்வாக்கும் நிறைந்த பலருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. தான் தலித் என்பதால் தனக்கு முதல்வர் பதவி வழங்கப்படவில்லை என துணை முதல்வர் பரமேஷ்வர் தெரிவித்திருந்தார். இதே போல், பசவலிங்கப்பா, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோருக்கும் முதல்வர் பதவி வழங்கப்படவில்லை .

மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடகாவுக்கும், காங்கிரஸுக்கும் ஆற்றிய பணிகள் அனைவருக்கும் தெரியும். அரசியலில் நீண்ட அனுபவமும், மக்கள் செல்வாக்கும் வாய்ந்தவர். இன்று காங்கிரஸில் இருக்கும் பல தலைவர்களை உருவாக்கியவர். அவரால் வளர்த்து விடப்பட்ட சிலர், அவருக்கு எதிராக செயல்படுகின்றனர். இவ்வளவு பெரிய தலைவரை காங்கிரஸார் ஏன் இன்னும் முதல்வராக்கவில்லை? இந்த விவகாரத்தில் கார்கேவுக்கு காங்கிரஸார் அநீதி இழைத்துவிட்டனர்.

காங்கிரஸ் எங்களோடு கூட்டணி அமைக்க விரும்பியபோது, என் தந்தை தேவகவுடா, மல்லிகார்ஜுன கார்கேவை முதல்வராக்க விரும்பினார். ஆனால், இங்குள்ள சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் காங்கிரஸ் மேலிடம் தயக்கம் காட்டியது. அதனால்தான், நான் முதல்வராக பொறுப்பேற்றேன். நான் முதல்வரானதை விட, கார்கே முதல்வராகி இருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்'' என்றார்.

முதல்வர் பதவியை சித்தராமையா கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ஆதரவாக குமாரசாமி பேசியுள்ளார். மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முதல்வர் பதவி வழங்க சித்தராமையா ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்தார் என கூறப்படும் நிலையில், குமாரசாமியின் இந்த பேச்சு காங்கிரஸாரிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x