Last Updated : 28 May, 2019 11:55 AM

 

Published : 28 May 2019 11:55 AM
Last Updated : 28 May 2019 11:55 AM

அசோக் கெலாட்டைச் சந்திக்க மறுத்த ராகுல் காந்தி: காங். கட்சிக்கு அடுத்த தலைவர் யார்?

மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ள தலைவர் ராகுல் காந்தி தனது முடிவை மாற்றாமல் பிடிவாதமாக இருந்து வருகிறார்.

காங்கிரஸ்  செயற்குழுக்கூட்டத்துக்குப்பின் இறுகிய முகத்துடன் காணப்படும் ராகுல் காந்தி, வெற்றிபெற்ற எம்.பி.க்களையும் சந்திக்க மறுத்துவிட்டார். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டையும் சந்திக்க மறுத்துவிட்டார்.

ராகுல் காந்தி தனது முடிவில் பிடிவாதமாக இருப்பதால், அடுத்த 4 நாட்களில் காங்கிரஸ் செயற்குழு மீண்டும் கூடி ராஜினாமா குறித்த விவகாரத்தில் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளது. ராகுல் காந்தி தனது ராஜினாமா வாபஸ் பெறாமல் பிடிவாதமாக இருக்கும்பட்சத்தில் புதிய தலைவரை தேர்வு செய்வது குறித்து செயற்குழு முடிவு செய்யும் எனத் தெரிகிறது.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலைப் போலவே இந்த முறையும் மோசமாக செயல்பட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டில் 44 இடங்களில் வென்ற நிலையில் இந்த முறை 52 இடங்களில் மட்டுமே வென்று எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட தொடர்ந்து 2-வது முறையாக இழந்துவிட்டது.

இதையடுத்து, தோல்விக்குப் பொறுப்பேற்று கடந்த சனிக்கிழமை நடந்த காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் ராகுல் காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், அந்த ராஜினாமாவை ஏற்க செயற்குழு உறுப்பினர்கள் மறுத்துவிட்டனர்.

ஆனால், தனது முடிவில் விடாப்படியாக இருக்கும் ராகுல் காந்தி தோல்விக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்வது தார்மீக பொறுப்பு என்று கூறி ராஜினாமாவை வாபஸ் பெற மறுத்துவிட்டார். தனது நிலைப்பாட்டில் இருந்தும் பின்வாங்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமல்லாமல் கட்சியில் முடிவு எடுப்பதில் எந்தவிதமான கட்டுப்பாடுகள் இல்லாமல், சுதந்திரமான சூழல் இருக்க வேண்டும். அதற்கு கட்சியின் மூத்த தலைவர்களுக்கு தெளிவாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் அடுத்துவரும் 4 நாட்களில் மீண்டும் கூட உள்ளது. அந்த கூட்டத்தில் கட்சியின் அடிப்படைகட்டமைப்பை சீரமைப்பது குறித்தும், சீர்த்திருத்தங்கள் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு முக்கிய முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

அதேசமயம், ராகுல் காந்தி தனது முடிவில் இருந்து பின்வாங்காமல் இருந்தால், கட்சிக்கான அடுத்த தலைவர் குறித்த முடிவையும் செயற்குழுக்கூட்டத்தில் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

கடந்த சில நாட்களாக இறுகிய முகத்துடன் காணப்படும் ராகுல் காந்தி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டை சந்திக்க மறுத்துவிட்டார். கெலாட்டின் மகனுக்கு சீட் வழங்கியதில் ராகுலுக்கு விருப்பம் இல்லை, அந்த கோபத்தில் கெலாட்டை சந்திக்க ராகுல் மறுத்துவிட்டார். மேலும், வெற்றி பெற்ற எந்த எம்.பி.க்களயும் இன்னும் ராகுல் காந்தி சந்திக்கும் முடிவில் இல்லை என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், காங்கிரஸ் கட்சிக்கு இப்போதுள்ள சிக்கல்களில் இருந்து எவ்வாறு மீண்டு வருவது, கட்சிக்கு எவ்வாறு புத்துணர்ச்சி அளிப்பது, புது ரத்தம் பாய்ச்சுவது குறித்து தொடர்ந்து ஆலோசனைகள் கட்சிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் அளிக்கப்பட்டு வருகின்றன. நிர்வாக கட்டமைப்பு ரீதியில் மாற்றம் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

கடந்த இரு நாட்களாக ராகுல் காந்தி, கட்சியின் பொருளாளர் அகமது படேல், செயலாளர் கே.சி. வேணுகோபால் ஆகியோரை மட்டும் வழக்கமான நிர்வாக அலுவல்ரீதியாக மட்டும் சந்தித்துள்ளார். மற்றவகையில் யாரையும் ராகுல் காந்தி சந்திக்கவில்லை.

மேலும், மக்களவைத் தோல்விக்கு பொறுப்பேற்று மகாராஷ்டிரா, அசாம், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ஒடிசா, கர்நாடக ஆகிய மாநிலங்களின் காங்கிரஸ் மாநிலத்தலைவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x