

மரண தண்டனைக் கைதிகளின் மறுசீராய்வு மனுவை மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, திறந்த நீதிமன்றத்தில் வெளிப்படை யாக விசாரிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இப்போதைய நீதிமன்ற நடைமுறைகளின்படி மறுசீராய்வு மனுக்கள் மீது வெளிப்படையாக விசாரணை நடத்தப்படுவது இல்லை. நீதிபதிகளின் அறை களில் தனியாக விசாரிக்கப்படு கின்றன.
இந்த நடைமுறையை ரத்து செய்து திறந்த நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
இதுதொடர்பாக தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
வழக்கு பின்னணி
கடந்த 2000-ம் ஆண்டில் நடைபெற்ற தருமபுரி பஸ் எரிப்பு சம்பவத்தில் கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகிய 3 மாணவிகள் தீயில் கருதி உயிரிழந்தனர். இதில் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகியோருக்கு கீழ் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதனை சென்னை உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி அவர்கள் மனு தாக்கல் செய்தனர். இதைத் தொடர்ந்து மறுசீராய்வு மனுவை திறந்த நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்று கோரியும் அவர்கள் மனு தாக்கல் செய்தனர்.
இதே விவகாரம் தொடர்பாக செங்கோட்டை தாக்குதல் வழக்கு, 1993-ம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு வழக்கு ஆகியவற்றில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
5 நீதிபதிகள் அமர்வு விசாரணை
இந்த மனுக்களை தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, நீதிபதிகள் ரோஹிங்டன் நாரிமன், ஏ.கே.சிக்ரி, கெஹர், செல்லமேஸ்வர் ஆகிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது.
மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கே.கே.வேணுகோபால், ஜஸ்பால் சிங், கோபால் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் ஆஜராகி வாதாடினர். மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் ஆஜரானார்.
இருதரப்பு வாதங்களும் முடிந்து நீதிபதிகள் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு அளித்தனர். இதில் தலைமை நீதிபதி லோதா உட்பட நான்கு நீதிபதிகள், திறந்த நீதிமன்ற விசாரணைக்கு ஆதரவாக தீர்ப்பு எழுதினர். நீதிபதி செல்லமேஸ்வர் மட்டும் எதிராகக் கருத்து தெரிவித்தார்.
பெரும்பான்மை நீதிபதிகளின் கருத்தின்படி, மரண தண்டனைக் கைதிகளின் மறுசீராய்வு மனுவை மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு திறந்த நீதிமன்றத்தில் வெளிப்படையாக விசாரிக்கலாம் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
மறுசீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட மரண தண்டனைக் கைதிகள் ஒரு மாத காலத்துக்குள் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம். அதேநேரம் மறுசீராய்வு மனுக்களில் நிவாரணம் பெற்றவர்கள் மீண்டும் நீதிமன்றத்தை அணுக முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மரண தண்டனை கைதிகளின் மறுசீராய்வு மனுக்களை இதுவரை 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு மட்டுமே விசாரித்து வந்தது. தற்போது உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின்படி குறைந்தபட்சம் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு மட்டுமே விசாரணை நடத்த முடியும் என்று தெரிவித்துள்ளது.