Published : 15 May 2019 10:44 AM
Last Updated : 15 May 2019 10:44 AM

கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பாக மக்களவைத் தேர்தலுக்கு பிறகு முடிவு: ஈரானிடம் இந்தியா உறுதி

மக்களவைத் தேர்தலுக்கு பிறகு ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பான முடிவை இந்தியா எடுக்கும் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஜாவேத் ஷெரிபிடம், இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், உறுதியளித்தார்.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும் ஈரானுடனான அணுஆயுத ஒப்பந்தத்தை பைத்தியக்காரத்தனமானது என்று ட்ரம்ப் கடுமையாக விமர்சித்து வந்தார்.

இந்த நிலையில் ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது. ஆனால் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த பிற நாடுகள் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தன. ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியவுடன் அந்த நாட்டின் மீது  பொருளாதர தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது.

எனினும், இந்தியாவும் தோழமை நாடுகள் சிலவும் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஈரானிடமிருந்து பெறும் எண்ணெயை வேறு இடங்களிலிருந்து வாங்கிக்கொள்ள ஆறு மாத கால அவகாசத்தை அமெரிக்கா வழங்கியது.

இந்த அவகாசம் மே 2-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் ஈரானிடமிருந்து பெட்ரோலிய எண்ணெய் வாங்குவதை நிறுத்துங்கள் அல்லது நாங்கள் எடுக்கும் பொருளாதாரத் தடை நடவடிக்கைகளை எதிர்கொள்ளுங்கள் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திக் கொள்வதாக இந்தியா அறிவித்தது.

இந்தநிலையில் ஈரான் வெளியுறவு அமைச்சர் ஜாவேத் சர்தாரி டெல்லியில் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை நேற்று சந்தித்து பேசினார். அப்போது ஈரானில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

இந்தியாவில் தற்போது மக்களவைத் தேர்தல் நடைபெறுவதால் தேர்தலுக்கு பிறகு இதுபற்றிய முடிவை இந்தியா எடுக்கும் என சுஷ்மா சுவராஜ், ஜாவேத் ஷெரிபிடம் உறுதி அளித்தார். இதுமட்டுமின்றி அமெரிக்காவின் பொருளாதார தடை, ஈரான் கச்சா எண்ணெய் வர்த்தக விவகாரம், மத்திய கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாகவும் இருவரும் விவாதித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x