பெண் ஊழியர் பாலியல் புகார்: வரலாற்றில் முதன்முறையாக விசாரணைக் குழு முன் தலைமை நீதிபதி ஆஜர்

பெண் ஊழியர் பாலியல் புகார்: வரலாற்றில் முதன்முறையாக விசாரணைக் குழு முன் தலைமை நீதிபதி ஆஜர்
Updated on
1 min read

பெண் ஊழியர் அளித்த பாலியல் புகாரை விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவின் முன் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் ஆஜரானார்.இந்திய நீதித்துறையின் வரலாற்றிலேயே பாலியல் புகார் தொடர்பாக விசாரணைக் குழுவின் முன் தலைமை நீதிபதி ஆஜராகி விளக்கம் அளிப்பது இதுதான் முதல் முறையாகும்.

வழக்கமாக நோட்டீஸ் அனுப்பி ஆஜராக கோரப்படும், ஆனால், தலைமை நீதிபதி என்பதால் ரஞ்சன் கோகய்க்கு நோட்டீஸ் அனுப்பப்படவில்லை. மாறாக முறையான வேண்டுகோள் கடிதம் அனுப்பிய விசாரணைக் குழு நீதிபதிகள், குழுவின் விசாரணையில் பங்கேற்கும்படி கேட்டுக்கொண்டனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

விசாரணைக் குழுவின் முன் ஆஜராகிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், தேவையான தகவல்களை தெரிவித்தார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றிய முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் , கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்ததாக இரண்டு சம்பவங்களைக் குறிப்பிட்டு நீதிபதி ரஞ்சன் கோகய் மீது பாலியல் அத்துமீறல் புகார்களை தெரிவித்தார். இந்தப் புகார்களை உச்ச நீதிமன்றத்தில் உள்ள  22 நீதிபதிகளுக்கும் அந்தப் பெண் பிரமாணப் பத்திரமாக அனுப்பினார்.

இதைத்தொடர்ந்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் பரிந்துரையின் அடிப்படையில் அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் மிக மூத்த நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்கப்பட்டது. அந்த அமர்வில் மூத்த நீதிபதி என்.வி.ரமணா, பெண் நீதிபதி இந்திரா பானர்ஜி ஆகியோர் இடம் பெற்றனர்.

ஆனால், நீதிபதி ரமணா இடம் பெற்றிருப்பது குறித்து அந்த பெண் அதிருப்தி தெரிவித்ததால், நீதிபதி ரமணா தாமாக வந்து விலகினார். இதையடுத்து, அவருக்கு பதிலாக பெண் நீதிபதி இந்து மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், நீதிபதி பாப்டே தலைமையிலான 3 நீதிபதிகள் விசாரணைக் குழு கடந்த 26-ம் தேதியில் முதல் நாள்தோறும் விசாரணை நடத்தி வருகிறது. இந்த குழுவின் முன் கடந்த செவ்வாய்க்கிழமை ஆஜராகிய அந்த பெண் ஊழியர், தன்னுடன் வழக்கறிஞரை அனுமதிக்க  வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைச் சுட்டிக்காட்டி விசாரணையில் பங்கேற்காமல் வெளியேறினார். மீண்டும் அந்த பெண்ணிடம் எப்போது விசாரணை நடக்கும் என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in