ராஜ்யவர்தன் சிங் ரத்தோருக்கு ராஜஸ்தான் பாஜக தலைவர் பதவி காத்திருக்கிறதா?

ராஜ்யவர்தன் சிங் ரத்தோருக்கு ராஜஸ்தான் பாஜக தலைவர் பதவி காத்திருக்கிறதா?
Updated on
1 min read

மத்திய அமைச்சரவையில் இடம்பெறாத ராஜ்யவர்தன் சிங் ரத்தோருக்கு ராஜஸ்தான் பாஜகவின் தலைமை பொறுப்பு வழங்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த முறை மோடி அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை இணை அமைச்சராக இருந்த ரத்தோர் இம்முறை அமைச்சரவையில் இடம்பெறவில்லை.

இது சர்ச்சை பொருளாக விவாதிக்கப்பட்டது. இளம் முகம், ஒலிம்பிக் சாம்பியன், நன்றாக பணியாற்றியவருக்கு ஏன் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என விவாதங்கள் எழுந்தன.

இந்நிலையில், அவருக்கு அதற்குப் பதிலாக ராஜஸ்தான் பாஜகவின் தலைமை பொறுப்பு வழங்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்றி தெரிவித்து ட்வீட்..

இதற்கிடையில், அமைச்சரவையில் இடம்பெறாவிட்டாலும்கூட தனது கட்சியின் மூத்த தலைவர்கள் பலருக்கும் நன்றி தெரிவித்து ட்வீட்களை பதிவு செய்துள்ளார் ரத்தோர்.

அவற்றின் தொகுப்பு:

பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் அமைச்சரவையில் ஓர் உறுப்பினராக இருந்தது மிகப்பெரிய கவுரவம். அவருடன் செலவழித்த ஒவ்வொரு நொடியும் அவரது தொலநோக்குப் பார்வை, சக்தி, தேசத்தின் மீதான பற்றுக்கு சாட்சி. பிரதமருக்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன். ஜெய் ஹிந்த்.

கடந்த 5 ஆண்டுகளில் நிறையவே கற்றுக் கொண்டேன். அருண் ஜேட்லி, வெங்கய்யா நாயுடு, ஸ்மிருதி இரானி போன்ற சிறந்த தலைவர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அதற்காக அவர்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ரத்தோர் பதிவிட்டுள்ளார்.

கட்சிப் பதவி காத்திருக்கிறது...

ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருந்தாலும் அவருக்கு ராஜஸ்தான் பாஜகவை தலைமை தாங்கும் பொறுப்பு காத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வியைத் தழுவியது. இதனால் மாநிலத் தலைமையை மாற்ற வேண்டும் என பாஜக முடிவு செய்துள்ளது. இதற்காக முன்னாள் எம்.எல்.ஏ., கஜேந்திர சிங் ஷெகாவத் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், அவரை முன்னாள் முதல்வர் வசுந்தர ராஜே உள்ளிட்டவர்கள் ஏற்கவில்லை. உயர்சாதி வகுப்பைச் சேர்ந்தவரை அப்பதவியில் அமர்த்தினால் மற்ற சமூகத்தினருடன் தொடர்பற்று போகும் எனக் கூறினார்.

இதனால், அமைச்சரவையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள ராஜ்யவார்தன் சிங் ரத்தோருக்கு ராஜஸ்தான் பாஜக தலைமை பொறுப்பு வழங்கப்பட அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், ராஜ்யவர்தன் ரத்தோர் ஜெய்ப்பூர் ரூரல் தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளர் கிருஷ்ண பூணியாவை 3.89 லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in